இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் அந்நாட்டுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து விளையாடி வருகிறது.
ஸ்மித் அபார பேட்டிங் :
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, சிட்னியில் நடைபெற்றுவரும் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், ஹெட் ஆகியோர் களமிறங்கினர். முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே இருவரும் ஆட்டமிழந்தனர். பின்னர் களம் புகுந்த ஸ்டீவன் ஸ்மித் லபுச்சக்னே ஆகியோர் அரை சதம் விளாசினர்.
ஸ்மித் 94 ரன்களும், லபுஸ்சேன் 58 ரன்களும் பதிவு செய்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷும் அரை சதம் பதிவு செய்தார். ஸ்டாய்னிஸ், அகர், ஸ்டார்க் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ், வில்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொயீன் அலி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இவ்வாறாக ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது.
3 விக்கெட் இழப்பு :
இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடி வருகிறது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 'டக்' அவுட்டானார். பிலிப் சால்ட் 23 ரன்களிலும், டேவிட் மலான் ரன்கள் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர். 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து 45 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் போட்டி :
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் மூன்று ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் கம்மின்ஸ் 10 ஓவர்கள் வீசி 62 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய அணி 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. அந்த அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது.