ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. காபாவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வென்றிருந்தது. இரண்டாவது போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பில் மைக்கேல் நீசர் எனும் வீரர் அறிமுகமாகியிருந்தார். அறிமுக போட்டியில் அவர் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தியிருந்தார். அவரை ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இரண்டாவது பந்திலேயே விக்கெட் எடுத்தார் என்பதற்காக மட்டும் ரசிகர்கள் அவரை கொண்டாடவில்லை. அவர் கடந்து வந்த பாதையை மனதில் வைத்தே கொண்டாடியிருந்தனர்.


மைக்கேல் நீசர் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்.  அவருக்கு 10 வயதாக இருக்கும் போது குடும்பம் மொத்தமும் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்துவிட்டது. ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி திறமையை வளர்த்துக் கொண்டவர், உள்ளூர் அணியான குயின்ஸ்லாந்து அணிக்காக தொடர்ந்து சிறப்பான பெர்ஃபார்மென்ஸ்களை கொடுத்துக் கொண்டே இருந்தார். எல்லா வீரர்களுக்கும் தங்கள் நாட்டின் தேசிய அணியில் ஆட வேண்டும் என்பதே கனவாக இருக்கும். நீசருக்கும் அப்படியே. ஆனால், அவருக்கான வாய்ப்பு மட்டும் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருந்ததால் நீசருக்கான தேவை ஆஸ்திரேலிய அணிக்கும் ஏற்பட்டிருக்கவில்லை. 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக ஓடிஐ போட்டியில் நீசர் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளே நீசரின் லட்சியம் என்பதால் இது பெரியளவில் அவருக்கு திருப்தியை கொடுக்கவில்லை. கடந்த 2018 லிருந்து இப்போது வரை உள்ளூர் போட்டிகளில் மட்டும் 130 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இப்படி ஒரு திறமையான வீரரை வாய்ப்புக்காக நீண்ட காலம் காத்திருக்க வைப்பது ஏற்புடையது அல்ல என பலரும் ஆட்சேபமமும் தெரிவித்திருந்தனர்.


கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாகவே ஆஸ்திரேலிய அணி ஆடிய அத்தனை டெஸ்ட் தொடர்களுக்கான அணியிலுமே நீசரின் பெயரும் இடம்பெற்றிருக்கும். ஆனால், களத்தில் இறங்கி ஆடும் ப்ளேயிங் லெவனில் அவர் இருக்கமாட்டார். பென்ச்சிலேயே வைக்கப்பட்டிருந்தார். வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே சுமந்து கொண்டிருப்பார். தொடர்ச்சியாக 17 டெஸ்ட் போட்டிகளில் இதைத்தான் செய்துகொண்டிருந்தார்.



இந்நிலையில்தான் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஹேசல்வுட், கம்மின்ஸ் ஆகியோர் ஆட முடியாமல் போகவே மைக்கேல் நீசருக்கு முதல் முறையாக ஆஸ்திரேலிய ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தின் கையால் நீசருக்கு தொப்பி அணிவிக்கப்பட்டது.


இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று நீசருக்கு ஆடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. முதலில் பேட்டிங். டெய்ல் எண்டராக இறங்கினாலும் நீசர் பேட்டிங் செய்யக்கூடிய ஆல்ரவுண்டரே. அதை தனது முதல் இன்னிங்ஸிலேயே நிரூபித்து விட்டார். 24 பந்துகளில் 35 ரன்களை எடுத்து அதிரடி காட்டியிருந்தார். வோக்ஸின் ஒரே ஓவரில் பவுண்டரி சிக்சர்களுடன் 16 ரன்களை சேர்த்து அசத்தியிருந்தார். டிக்ளேர் செய்யும் மனநிலையில் இருந்த ஆஸிக்கு கடைசிக்கட்டத்தில் ஸ்டார்க்குடன் சேர்ந்து அதிரடியாக ப்ரயோஜனமான ரன்களை சேர்த்துக் கொடுத்தார்.


அடுத்ததாக பந்துவீச்சு. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க்கும் ரிச்சர்ட்சனுமே முதல் ஸ்பெல்லை வீசியிருந்தனர். 7 வது ஓவரே நாருக்கு கிடைத்திருந்தது. ஆனால், அவர் வீசிய அந்த முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே இங்கிலாந்து அணியின் ஓப்பனரான ஹசீப் ஹமீதின் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார். ஒட்டு மொத்த அடிலெய்டு மைதானமுமே உற்சாகத்தில் ஆர்ப்பரித்தது. அத்தனை ஆஸி வீரர்களும் கூடுதல் வாஞ்சையோடு நீசரை கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர். நீண்ட கால காத்திருப்பிற்கு ஏற்ற பலனை நீசர் அனுபவித்தார்.


மழை காரணமாக 45 நிமிடங்களுக்கு முன்பாகவே போட்டி முடிந்துவிட்டது. இல்லையேல், இன்னும் சில சம்பவங்களை நீசர் நிகழ்த்தியிருப்பார்.