இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்ன்ர் விலகுவதாக அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது, சிராஜ் வீசிய பந்து தலைக்கவசம் மீது பட்டு வார்னர் காயமடைந்தார். இதன் காரணமாக, போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வார்னர் களமிறங்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்றாக, இடது கைபேட்ஸ்மேனும், ஆல்ரவுண்டருமான ரென்ஷா சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் புதிய விதிகளின்படி, ரென்ஷாவால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய முடியும். அதேநேரம், பேட்ஸ்மேன் ஆன வார்னருக்கு மாற்றாக களமிறங்குவதால், ரென்ஷாவிற்கு பந்துவீச அனுமதி அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.