INDvsAUS Test: உலகின் மிகப்பெரிய டெஸ்ட் போட்டியாக கருதப்படும் டெஸ்ட் போட்டித் தொடரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் விரைவில் மோதவுள்ளன. இந்த தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. 4-போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாட ஆஸ்திரேலிய அணி புது முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் சில பயிற்சி ஆட்டங்களை விளையாடும் திட்டத்தை நிராகரித்ததால், ஆஸ்திரேலியா தனித்துவ முறையில் டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியினைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தல் தரும் பந்து வீச்சாளர் என்றால் அது ரவிச்சந்திரன் அஸ்வின் தான். இவரது பந்துவீச்சினை, ஆஸ்திரேலிய பேட்டர்கள் எதிர்கொள்ள, அஸ்வினைப் போல் பந்து வீசும் மகேஷ் பித்தியாவை பந்து வீசச் சொல்லி பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மகேஷ் பித்தியா அஸ்வினைப் போன்று பந்து வீசக்கூடிய ஒற்றுமையைக் கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் உதவி ஊழியர்களுக்கு பித்தியாவின் பந்துவீச்சு காட்சிகள் சமூக ஊடகங்கள் வழியாக அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கும் அஷ்வினுக்கும் இடையே உள்ள வினோதமான ஒற்றுமைகளைப் பார்த்து வியந்துள்ளனர். அதன் பின்னர் ஆலூரில் உள்ள கேஎஸ்சிஏ மைதானத்தில் நான்கு நாள் பயிற்சி முகாமிற்கு அந்த இளைஞரை ஆஸ்திரேலிய அணி அணுகி பந்து வீச அழைத்துள்ளனர். அவரும் பந்து வீச சென்றுள்ளார்.
அஸ்வினை வீழ்த்த வியூகம்:
இந்தியாவில் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வெல்வதற்கான நம்பிக்கையில் அஸ்வினை மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக அடையாளம் காணும் ஆஸ்திரேலியா, இதனை எதிர் கொள்ளத்தான் பித்தியாவை பயன்படுத்துகிறது. 2004குப் பிறகு இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையான டெஸ்ட் தொடரில் தயாராகும் ஆடுகளங்களைப் போல் ஒற்றுமைத்தன்மை உள்ள ஆடுகளங்களை ஏற்கனவே தயார் செய்துள்ள ஆஸ்திரேலியா, அஸ்வின் அத்தகைய ஆடுகளங்களில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை பழகிக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையில் பித்தியா பந்து வீச செய்து ஆஸ்திரேலிய அணி தன்னை தயார் செய்து வருகிறது.
மகேஷ் பித்தியா:
21 வயதான இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் ப்ரோடாவுக்காக முதல்தர போட்டியில் அறிமுகமானார். பித்தியாவுக்கு நிச்சயமாக ஒரு நாள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் லட்சியம் இருக்கும். ஆனால், இப்போதைக்கு இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலியா உருவாக்கிய ஆயத்தத் திட்டத்தின் முக்கிய அங்கமாக அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.