David Warner: பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.


ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி:


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், சிட்னி நகரில் தொடர்ன் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. கடந்த 3ம் தேதி தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 313 ரன்களை சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 299 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 14 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, வெறும் 115 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து 130 ரன்கள் என்ற இலக்குடன் களமிறக்கிய ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள்கொண்ட தொடரை 3-0 என முழுமையாக கைப்ப்ற்றி பாகிஸ்தானை ஒயிட் - வாஷ் செய்தது.





கடைசி டெஸ்டிலும் அசத்திய டேவிட் வார்னர்:


இதனிடயே, பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருடன் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, சிட்னியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி அவருக்கு இறுதி போட்டியாக அமைந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் 34 ரன்களை சேர்த்த டேவிட் வார்னர், இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்களை சேர்த்தார். டெஸ்ட் போட்டிகளில் தனது 37வது அரைசதத்தை பூர்த்தி செய்ய, மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று வார்னரை உற்சாகப்படுத்தினார்.


விடைபெற்றார் டேவிட் வார்னர்:


தொடர்ந்து 57 ரன்கள் சேர்த்து இருந்தபோது சஜித் கான் பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில், தனது கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் வார்னர் ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் வார்னருக்கு வாழ்த்து கூறி வழியனுப்பி வைக்க, ஒட்டுமொத்த மைதானமும் கைதட்டல்களால் அதிர்ந்தது. பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த டேவிட் வார்னர், தனது கையில் இருந்த ஹெல்மெட் மற்றும் கையுறைகளை அங்கிருந்த சிறுவன் ஒருவனுக்கு வழங்கினார். முன்னதாக வார்னர் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியபோது, அவருக்கு பாகிஸ்தான் வீரர்கள் காட் ஆஃப் ஹானர் மரியாதை வழங்கினர்.






வார்னர் கிரிக்கெட் சாதனைகள்:


 கடந்த 2011ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வார்னர், 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 26 சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் உட்பட 8 ஆயிரத்து 786 ரன்களை குவித்தார். அதிகபட்சமாக 335 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். முன்னதாக ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விடைபெறுவதாக, அண்மையில் வார்னர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.