இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வருகின்ற ஜூன் 7 ம் தேதி நடைபெற இருக்கிறது. அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் வருகின்ற ஜூன் 16ம் தேதி தொடங்கி ஜூலை 27ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு தொடருக்கான 17 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்தது. அதில், மாட் ரென்ஷா, மார்கஸ் ஹாரிஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி மற்றும் ஆண்கள் ஆஷஸ் அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், டோட் மர்பி மேத்யூ ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லான்ஸ் மோரிஸ், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு ஆறு வாரங்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவுட் ஆப் பார்மில் உள்ள டேவிட் வார்னரிம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக மோசமான பார்ம் இருந்தபோதிலும், வார்னர் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். நியூசிலாந்தில் ஆஸ்திரேலியா-ஏ அணிக்காக மேத்யூ ரென்ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் இடம் பிடித்தார். ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக இடம்பிடித்துள்ளனர். இந்திய சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்ட டாட் மர்பியும் அணியில் இணைந்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் லான்ஸ் மோரிஸ் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் காயம் காரணமாக தேர்வு செய்யப்படவில்லை. அதே நேரத்தில் ரிச்சர்ட்சன் தொடை எலும்பு அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வருகிறார். மிட்செல் மார்ஷ் கடைசியாக 2019 ஆஷஸ் தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். தற்போது நீண்ட நாட்களுக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.
மே மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து சென்றடையும் என்றும், மே 28-ம் தேதிக்குள் 15 பேர் கொண்ட இறுதி அணி அறிவிக்கப்படும் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.