தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். 


களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 68.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக மார்கோ ஜென்சன் 59 ரன்களும், கைல் வெரைன் 52 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர்.தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. 


100வது டெஸ்ட்டில் இரட்டை சதம்:


இதனிடையே இன்று 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தனது 100வது டெஸ்ட் போட்டியில் ஆடிய ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை விளாசி தள்ளினார். தொடர்ந்து தனது 25வது டெஸ்ட் சதம் அடித்து அசத்திய வார்னர், 100வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த வீரர்களின் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்தார். ஆனாலும் வார்னரின் அசுர தாண்டவம் நின்ற பாடில்லை. 


பந்துகளை பவுண்டரிகள், சிக்ஸர்களுமாக விளாசிய அவர் 254 பந்துகளில் தனது இரட்டை சதத்தை எட்டினார். இதன்பின்னர் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வார்னர் பெவிலியன் திரும்பினார். அவருக்கு பக்க பலமாக அடித்த ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கைவசம் இன்னும் விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை விட  150 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  


தனித்துவமான சாதனை: 


ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வரும் டேவிட் வார்னர் தனது 100வது ஒருநாள் போட்டியிலும் சதமடித்திருந்தார். இதையடுத்து, 100வது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்டன் கிரீனிட்ஸ் தனது நூறாவது ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை வைத்துள்ளார். 


டேவிட் வார்னரின் மேலும் ஒரு சாதனை


சர்வதேச அளவில் தனது 100வது டெஸ்டில் விளையாடி இரட்டை சதமடித்த 2வது வீரர் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றுள்ளார். முதல் இடத்தில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட் உள்ளார். இவர் கடந்தாண்டு இந்திய அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்தார். 


சமன் செய்யப்பட்ட சச்சினின் சாதனை


இந்த போட்டியில் அடிக்கப்பட்ட சதத்தின் மூலம் அவர் தொடக்க வீரராக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 45 சதங்கள் அடித்துள்ளார். இது சர்வதேச போட்டிகளில் 100 சதம் அடித்த சச்சின் தொடக்க வீரராக களமிறங்கி 45 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.