2024 டி20 உலகக் கோப்பையில் 4வது சூப்பர் 8 போட்டி ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்கியது. 

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷாண்டோ 41 ரன்களும், ஹிரிடோய் 40 ரன்களும் எடுத்திருந்தனர். 

இந்த நிலையில், இந்த போட்டியில் இதுவரை யாரும் செய்யாத சிறப்பு சாதனையை, இந்த டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் செய்துள்ளார். 

அப்படி என்ன சாதனை..? 

2024 டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் பெற்றுள்ளார். வங்கதேசம் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது  மஹ்முதுல்லா ரியாத், மெஹ்தி ஹசன் மற்றும் தௌஹீத் ஹிர்டோய் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து மூன்று பந்துகளில் வீழ்த்தி பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.  இதன்மூலம், 2024 டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பாட் கம்மின்ஸ் பெற்றார். இது மட்டுமின்றி, டி20 உலகக் கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக ஏழாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

பாட் கம்மின்ஸுக்கு முன், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ கடந்த 2007ம் ஆண்டு இந்த சாதனையை படைத்திருந்தார். இது தவிர, கர்டிஸ் கேம்பர் (அயர்லாந்து), வனிந்து ஹசரங்க (இலங்கை), ககிசோ ரபாடா (தென் ஆப்ரிக்கா), கார்த்திக் மெய்யப்பன் (யுஏஇ), ஜோசுவா லிட்டில் (அயர்லாந்து) ஆகியோர் டி20 உலகக் கோப்பையில் இதுவரை ஹாட்ரிக் சாதனையை படைத்துள்ளனர்.

டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் எடுத்த பந்துவீச்சாளர்கள்:

வீரர்கள் நாடு எதிரணி இடம் ஆண்டு
பிரட் லீ ஆஸ்திரேலியா வங்கதேசம் டவுண் கார்னர் 2007
கர்டிஸ் கேம்பர் அயர்லாந்து நெதர்லாந்து அபுதாபி 2021
வனிந்து ஹசரங்க இலங்கை தென்னாப்பிரிக்கா ஷார்ஜா 2021
ககிசோ ரபாடா தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து ஷார்ஜா 2021
கார்த்திக் மெய்யப்பன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இலங்கை கீலாங் 2022
ஜோசுவா கொஞ்சம் அயர்லாந்து நியூசிலாந்து அடிலெய்டு 2022
பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா வங்கதேசம் ஆன்டிகுவா 2024

டி20யில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய நான்காவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பாட் கம்மின்ஸ் படைத்துள்ளார். இவருக்கு முன், பிரட் லீ (2007), ஆஷ்டன் அகர் (2020), நாதன் எல்லிஸ் (2021) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 59 ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

சர்வதேச டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்:

வீரர்கள் எதிரணி இடம் ஆண்டு
பிரட் லீ வங்கதேசம் டவுண் கார்னர் 2007
ஆஷ்டன் அகர் தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் 2020
நாதன் எல்லிஸ் வங்கதேசம் மிர்பூர் 2021
பாட் கம்மின்ஸ் வங்கதேசம் ஆன்டிகுவா 2024