சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 13ஆவது உலகக் கோப்பை இறுதிப் போட்டி, இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.


எதிர்பார்ப்பை கிளப்பிய உலக கோப்பை இறுதிப்போட்டி: 


கடந்த 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்கு, ஆஸ்திரேலியாவை பழிவாங்கும் நோக்கில் இந்திய அணி களமிறங்க உள்ளது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு, இந்த மைதனாத்தில் அதிகம் விளையாடி இருக்கும் அனுபவத்தோடு இந்திய பந்துவீச்சாளர்கள் நிச்சயம் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த போட்டி, இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.


இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், ஆஸ்ட்ரோடாக் செயலி பயனாளர்களுக்கு 100 கோடி ரூபாய் பிரித்து வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி புனித் குப்தா அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


ஆஸ்ட்ரோடாக் பயனாளர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்:


இதுகுறித்து லிங்க்ட்இன் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடைசியாக 2011இல் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. அப்போது, நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அது என் வாழ்வின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றாகும். இரவு முழுவதும் போட்டியில் பின்பற்றப்படும் வியூகத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததால், போட்டியின் முந்தைய நாள் எங்களுக்கு தூக்கம் வரவில்லை.


நாங்கள் போட்டியில் வென்றவுடன், எனக்கு நீண்ட நேரம் சிலிர்ப்பு இருந்தது. நான் என் நண்பர்கள் அனைவரையும் கட்டிப்பிடித்தேன். நாங்கள் சண்டிகரில் பைக் சவாரி செய்து, ஒவ்வொரு ரவுண்டானாவிலும் தெரியாத நபர்களுடன் பாங்க்ரா நடனம் ஆடினோம். சந்தித்த அனைவரையும் கட்டி அணைத்தோம். அது உண்மையிலேயே என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள்.


கடந்த முறை எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள சில நண்பர்கள் இருந்தனர். ஆனால், இந்த முறை எங்களிடம் பல ஆஸ்ட்ரோடாக் பயனர்கள் உள்ளனர். அவர்கள் நண்பர்களைப் போலவே இருக்கிறார்கள். எனவே, அவர்களுடன் எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நான் ஏதாவது செய்ய வேண்டும்.


எனவே, நேற்று காலை நான் எனது நிதிக் குழுவிடம் பேசி, இந்தியா உலகக் கோப்பையை வென்றால், எங்கள் பயனர்களுக்கு அவர்களின் வாலெட்டில் ₹ 100 கோடி பிரித்து வழங்கும்படி கூறியுள்ளேன். இந்தியாவுக்காக பிரார்த்திப்போம், ஆதரிப்போம், உற்சாகப்படுத்துவோம். Indiaaaaa இந்தியா!!!" என பதிவிட்டுள்ளார்.