ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 சீனாவின் ஹாங்சோவில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் முதல்முறையாக களமிறங்குகிறது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியானது முற்றிலும் டி20 வடிவத்தில் விளையாடப்பட இருக்கிறது. இந்திய ஆண்கள் அணிக்கு பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட்டும், பெண்கள் அணிக்கு இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் தலைமை தாங்குகின்றனர். இந்தநிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் எப்போது கிரிக்கெட் விளையாடப்படும், அதை நீங்கள் எப்படி நேரடியாகப் பார்க்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் கிரிக்கெட் அணியில் முழங்காலில் காயம் ஏற்பட்டு விலக்கப்பட்ட அஞ்சலி சர்வானிக்கு பதிலாக பூஜா வஸ்த்ரகர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆண்கள் அணியில் சிவம் மாவி முதுகில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருவதால், 26 வயதான ஆகாஷ் தீப் ஆடவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் போட்டி எப்போது நடக்கும்?
ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியானது வருகின்ற செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறுகிறது. அதே நேரத்தில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியானது செப்டம்பர் 19 (நாளை) முதல் 28 வரை நடைபெறுகிறது.
காலிறுதிக்குள் நேரடியாக நுழையும் இந்தியா:
ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் லீக் நிலை மற்றும் நேரடி நுழைவு என இரண்டும் உள்ளது. லீக் சுற்றில் அணிகள் மொத்தம் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய டாப்-4 அணிகள் நேரடியாக காலிறுதிக்குள் நுழைகிறது. குரூப் ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான், மங்கோலியா அணிகளும், பி பிரிவில் கம்போடியா, ஜப்பான், நேபாளம், குரூப் சியில் ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து அணிகளும், டி பிரிவில் மலேசியா, பஹ்ரைன், மாலத்தீவு ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் டிவி மற்றும் மொபைலில் நேரடியாக எங்கு பார்க்கலாம்?
ஆசிய விளையாட்டு போட்டிகள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் இந்தியாவில் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இவை சோனி லைவ் ஆப் மூலம் மொபைலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
போட்டிகள் எங்கு நடைகிறது?
ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் அனைத்து போட்டிகளும் Zhejiang தொழில்நுட்ப பல்கலைக்கழக Pingfeng கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி:
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் தீப்
காத்திருப்பு வீரர்கள்: யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்ஷன்.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மகளிர் கிரிக்கெட் அணி
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷெபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், தேவிகா வைத்யா, டைட்டஸ் சாது, ராஜேஸ்வரி கெய்க்வாட், மின்னு மணி, கனிகா அஹுஜா, உமா சேத்ரிஜா, (விக்கெட் கீப்பர்) , அனுஷா பரேடி மற்றும் பூஜா வஸ்த்ரகர்.