ஆசிய கோப்பையின் சூப்பர் 4  சுற்றில் கடைசி லீக் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 


இந்தியா - வங்கதேசம்:


ஆசிய கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்தியா – இலங்கை அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், இன்று ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசும் என்று கேப்டன் ரோகித்சர்மா தெரிவித்துள்ளார்.


இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக இன்றைய போட்டியில் விராட்கோலி. ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு திலக் வர்மா, அக்‌ஷர் படேல், பிரசித் கிருஷ்ணா களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியின் வெற்றி, தோல்வி இந்திய அணியை எந்தவிதத்திலும் பாதிக்காது என்பதால் இவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.


அனல் பறக்குமா?


அதேசமயம், தொடரை விட்டு வெளியேறிய வங்கதேசம் வெற்றியுடன் வெளியேற விரும்பும் என்பதால் அவர்கள் இந்த போட்டியில் அதிரடியாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியில் லிட்டன் தாஸ், தன்சித் ஹாசன், அனமுல் ஹக், ஹிரிதோய், ஹொசைன், மெகிதி ஹாசன், நசும் அகமது, சகீப், முஷ்தபிஸூர் ரஹ்மான் களமிறங்கியுள்ளனர்.


வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெகிதி ஹாசன், அனமுல் ஹக், ரஹ்மான் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆவார்கள். இந்திய அணிக்கு எதிராக ஆடிய அனுபவமும் உள்ளவர்கள் என்பதால் அவர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதேசமயம் இந்திய அணியில் இன்று ஆடும் இளம் வீரர்களே உலகக்கோப்பைக்கு அடுத்து வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக வாய்ப்பு உள்ளது என்பதால் அவர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இன்றைய போட்டியின் மழையின் தாக்கம் பெரியளவில் இருக்காது என்றும் கருதப்படுகிறது. இந்த போட்டியின் முடிவு இறுதிப்போட்டியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இரு அணியினரும் எந்த நெருக்கடியும் இல்லாமல் ஆடுவார்கள்.


கேப்டன் ரோகித், சுப்மன்கில், கே.எல்.ராகுல் நல்ல பார்மில் இருப்பதால் இன்றைய போட்டியிலும் ஜொலிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். 


மேலும் படிக்க: SL vs PAK: கடைசி வரை திக்.. திக்..! கடைசி பந்தில் இலங்கை திரில் வெற்றி... போராடி தோற்றது பாகிஸ்தான்..!


மேலும்படிக்க: IND vs BAN: சம்பிரதாய ஆட்டத்தில் மோதும் இந்தியா - வங்கதேசம் அணிகள்.. ஆனாலும் காத்திருக்கும் சாதனை..!