ஆசிய கோப்பை 2023 மூலம் இந்திய அணி 10 முறையாகவும், இலங்கை அணி 12வது முறையாகவும் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளன. ஆசிய கோப்பையில் இரு அணிகளும் இதுவரை 7 முறை இறுதிப்போட்டிகளில் மோதியுள்ளது. அதில், அதிகபட்சமாக இந்திய அணி 4 முறையும், இலங்கை அணி 3 முறையும் கோப்பைகளை வென்றுள்ளது. 


இம்முறை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 8வது முறையாக ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இந்தநிலையில் கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு ஆசிய கோப்பையில் இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி மோதலில் இந்திய அணி வெற்றிபெற்று 5வது முறையாக பட்டத்தை வென்றது. 


கடந்த 2010ல் நடந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கௌதம் கம்பீர் மற்றும் தினேஷ் கார்த்திக் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கம்பீர் வெறும் 15 ரன்களில் வெளியேற, தினேஷ் கார்த்திக் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 


அதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 28 ரன்களும், கேப்டன் எம்.எஸ்.தோனி 38 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். பின்னர் உள்ளே வந்த தற்போதையை ரோஹித் சர்மா 52 பந்துகளில் 41 ரன்கள் குவிக்க,  இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 9 பவுண்டரிகளின் உதவியுடன் 66 ரன்கள் குவித்திருந்தார். 


தடுமாறிய இலங்கை: 


269 ரன்களை துரத்த வந்த இலங்கை அணி 44.4 ஓவரில் 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக சாமர கபுகெதர 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசிவரை போராடினார். இருப்பினும், சாமரவின் இன்னிங்ஸால் அணிக்கு வெற்றியை பெற்றுத்தர முடியவில்லை. இலங்கை அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததே அந்த அணியின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம். இலங்கை அணி முதல் ஓவரிலேயே நட்சத்திர வீரர் திலகரத்ன தில்ஷன் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 


அவரை தொடர்ந்து இலங்கை அணி 51 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. கபுகெதர மட்டும் 55 ரன்களுடன் போராடி வந்தநிலையில், அவருக்கு யாரும் சப்போர்ட்டாக இல்லாததால் இலங்கை அணி 187 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. 


பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி: 


இப்போட்டியில் ஆஷிஷ் நெஹ்ரா 9 ஓவர்களில் 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர ஜாகீர் கான் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களும், பிரவீன் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். 


இன்றைய போட்டியில் மழை இருக்கா..?


கொழும்பில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். இதைத் தொடர்ந்து மதியம் 1 மணி, மாலை 6 மணி, இரவு 8 மணி மற்றும் 10 மணிக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேநேரம், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி திட்டமிட்ட நேரத்தில் இருந்து தாமதமாக தொடங்கலாம் என நம்பப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டைட்டில் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என நம்பப்படுகிறது. முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் சூப்பர்-4 சுற்று போட்டிக்கு ரிசர்வ் டே வைக்கப்பட்டது. அதேநேரம், இந்த இறுதிப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.