Asia Cup Squad 2025: ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி 2025:
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில், பல்வேறு குழப்பங்கள் நீடிப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகும் வண்ணம் உள்ளன.போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான அஜித் அகர்கர் தலைமையிலான ஆலோசனைக் குழு, நாளை மும்பையில் கூட உள்ளது. இதில் எதிர்பாராத பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் ஓய்வுக்குப் பிறகும், டி20 அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவுகிறது. இளம் வீரர்கள் பலரும் தங்களது திறனை காட்டி நம்பிக்கை நட்சத்திரங்களே உருவெடுத்து இருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
மூன்று எதிர்பாராத முடிவுகள்:
வெளியாகியுள்ள தகவல்களின்படி, யாரும் எதிர்பாராத மூன்று முக்கிய முடிவுகளை தேர்வுக்குழு எடுக்க வாய்ப்புள்ளதாம். அதில் ஒன்று டெஸ்ட் அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதும் அடங்கும் என கூறப்படுகிறது.
- கில்லுக்கு வாய்ப்பில்லை: கடந்த சில மாதங்களாக டி20 போட்டிகளில் இந்திய அணிக்கான சிறந்த தொடக்க ஜோடியாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை அப்படியே தொடரும் வகையில் கில்லுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம். மாற்று வீரராக அதிரடிக்கு பெயர் போன யஷஷ்வி ஜெய்ஷ்வால் பெயர் முன்னிலையில் உள்ளதாம்.
- முகமது சிராஜிற்கு ”நோ”: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகும் கூட, ஆசிய கோப்பை போட்டியில் சிராஜிற்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் என கூறப்படுகிறது. உடற்தகுதியால் அண்மைக்காலமாக அவதிப்பட்டாலும் பும்ரா அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாம். இது சிராஜிற்கான வாய்ப்பை மறுத்துள்ளது. அதேநேரம் அர்ஷ்தீப் சிங், பிரஷித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளனவாம்.
- ஸ்ரேயாஸ் அய்யரை நிராகரிக்கும் பிசிசிஐ: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் வலுவான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவும், கேப்டனாகவும் தன்னை நிரூபித்து கொண்டாலும் ஆசிய கோப்பை போட்டியில் அவருக்கு வாய்ப்பு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாம். திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் மிடில் ஆர்டருக்கான பிரதான தேர்வுகளாக இருப்பதாக தெரிகிறது. மறுமுனையில் ஹர்திக் பாண்ட்யாவுடன் ஷிவம் துபே மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆல்-ரவுண்டர் இடங்களுக்கான போட்டியில் உள்ளனராம்.
கம்பீர் செய்வது என்ன?
இந்திய அணி இதுவரையில் அனுபவமும் அதேநேரம் இளைஞர்களுடம் அடங்கிய கலவையாகவே பிரதான போட்டிகளில் களமிறங்கியுள்ளது. ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், சுப்மன் கில், சிராஜ் போன்ற நட்சத்திர வீரர்களை கழற்றி விடும் தேர்வுக்குழுவின் முடிவு, மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துமோ என ரசிகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கம்பீர் வலுவான எதிர்ப்பை பதிவு செய்து சரியான கலவையில் வீரர்களை தேர்வு செய்யாவிட்டால், மேற்குறிப்பிடப்பட்ட 3 மாற்றங்களையும் தேர்வுக்குழு செயல்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது நடப்பு சாம்பியனான இந்தியாவிற்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியை கடினமானதாக மாற்றக்கூடும். எனவே, சூழலை உணர்ந்து கம்பீர் உரிய முடிவை எடுப்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.