2023 ஆசிய கோப்பைக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்டவணை வெளியானதும் ரசிகர்களின் பார்வை இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் மீதே இருக்கும்.
ஆசிய கோப்பை 2023 தொடர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டி எப்போது? எங்கு நடைபெறும் என்று கேள்விகள்தான் அதிகமாக இருந்தது. இந்திய கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இறுதியாக ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்டன. அதன்படி, இந்தியா- பாகிஸ்தான் போட்டி இலங்கை நாட்டிலுள்ள கொழும்பு மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், தற்போது இந்தியா- பாகிஸ்தான் போட்டி தம்புல்லா ஸ்டேடியத்தில் நடைபெறுவது என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.
இருநாட்டு வாரியம் தெரிவித்த சம்மதம்:
சமீபத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப் ஆகியோர் டர்பனில் சந்தித்து பேசினர். ஆசிய கோப்பை போட்டி அட்டவணை குறித்து இரு வாரியங்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஆசியக் கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தது.
இதையடுத்து, பாகிஸ்தானை தவிர இலங்கையில் ஹைபிரிட் மாடல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இலங்கையில் 9 போட்டிகளும், பாகிஸ்தானில் 4 போட்டிகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்தியா-பாகிஸ்தான் போட்டி எந்த தேதியில் நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகாமல் இருந்து வந்தது. அந்த தகவலும் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியக் கோப்பை தொடர் எப்போது?
ஆசியக் கோப்பை தொடரானது வருகின்ற ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளை இந்திய ரசிகர்கள் ஹாட்ஸ்டாரில் நேரடி லைவில் பார்க்கலாம். இது தவிர ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு இருக்கும்.
இந்தியா-பாகிஸ்தான் தவிர இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்கின்றன.