Pak vs Nep, Asia Cup 2023: ஆசியக் கோப்பைத் தொடர் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பைத் தொடர் இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி துவங்கியது. கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணி 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசிய கோப்பைத் தொடரை நடத்துகிறது. அதுவும் இம்முறை பாகிஸ்தான் அணி இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகத்துடன் இணைந்து தொடரை நடத்துகிறது. 


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த தொடரை நடத்துவதற்கு எடுத்த முயற்சிகளை விடவும் இந்த தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வரவழைத்து போட்டியை நடத்த எடுத்த முயற்சிகள் தான் அதிகம். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் வீணாகப் போக இந்திய அணி பாகிஸ்தானில் நாங்க வந்து விளையாட மாட்டோம் என தெரிவித்துவிட்டனர். 


இந்நிலையில் இன்று துவங்கியுள்ள இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் உள்ள முக்கியம் மைதானங்களில் நடைபெறவுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த தொடரில் பாகிஸ்தான் அணியும் முதல் முறையாக ஆசிய கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ள நேபாளம் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 




15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசியக் கோப்பைத் தொடரை பாகிஸ்தான் அணி நடத்துவதால், அந்த அணி மீது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் மைதானத்தை ஆக்கிரமிப்பார்கள் என்ற எண்ணத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானில் உள்ள முல்தான் சர்வதேச மைதானத்தில் நடத்த திட்டமிட்டது. இந்த மைதானத்தில் 35 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க ஏதுவான மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் மைதானமே காத்து வாங்கிக்கொண்டு உள்ளது. இதனை பலரும் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 


இந்த தொடரில்  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஒரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.


அதில் ரவுண்ட் ராபின் முறைப்படி போட்டிகள் நடைபெறும். அதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆசியாவில் இடம்பெற்றுள்ள அணிகளை கொண்டு நடத்தப்படும் இந்த தொடர் கடந்த 1984ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முதலில் 50 ஓவர்கள் போட்டியாக நடத்தப்பட்ட இந்த தொடர், டி-20 பிரபலமானதை தொடர்ந்து டி-20 வகையிலும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இந்த தொடர் நடைபெறுகிறது. இதுவரை 14 முறை ஆசியக்கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக இந்திய அணி 7 முறையும், இலங்கை அணி 6 முறையும் இந்த கோப்பயை வென்றுள்ளது.