Asia Cup 2023 PAK Vs NEP: ஒருநாள் தொடராக திட்டமிடப்பட்டுள்ள ஆசியக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் நேபாளம் அணிகள் மோதுகின்றன. 


ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆசியக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன.  இந்த போட்டி பாகிஸ்தானில் உள்ள முல்தானி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 


இந்த தொடரை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும்,  ஓடிடியில் டிஸ்னி ஹாட் ஸ்டார் செயலியிலும் இலவசமாக கண்டு களிக்கலாம்.


இரண்டு நாடுகளில் தொடர்..!


முதலில் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த இந்த தொடர், இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் ஒரு சிறு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரண்டு நாடுகளில் ஹைபிரிட் முறையில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறுகிறது. ஒருவேளை இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், அந்த போட்டியும் இலங்கையிலேயே நடைபெறும். 


இரண்டு சுற்றுகள்:


இந்த தொடரில்  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஒரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.


அதில் ரவுண்ட் ராபின் முறைப்படி போட்டிகள் நடைபெறும். அதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.


இரு அணிகளின் பிளேயிங் லெவன்


நேபாளம் பிளேயிங் லெவன்: குஷால் புர்டெல், ஆசிப் ஷேக்(விக்கெட் கீப்பர்), ரோஹித் பவுடல்(கேப்டன்), ஆரிப் ஷேக், குஷால் மல்லா, திபேந்திர சிங் ஐரி, குல்சன் ஜா, சோம்பால் கமி, கரண் கேசி, சந்தீப் லமிச்சனே, லலித் ராஜ்பன்ஷி


பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப்