ஆசிய கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு இந்தியா – இலங்கை அணிகள் சென்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில், சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதி வருகின்றன.


திலக் வர்மா அறிமுகம்:


இந்த போட்டியின் முடிவு ஆட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால், இரு அணிகளும் எந்த நெருக்கடியும் இல்லாமல் ஆடுகின்றனர். இந்த நிலையில், இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக இன்றைய போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


இதனால், இன்றைய போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரராக திலக் வர்மா களமிறங்கியுள்ளார். ஏற்கனவே இந்திய அணிக்காக டி20 போட்டியில் ஆடிய திலக் வர்மா இன்றைய போட்டி மூலம் ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளார். கடந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக சிறப்பாக ஆடியதைத் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்தார். குறுகிய காலத்திலே இந்திய அணிக்குள் இடம்பிடித்த திலக் வர்மாவிற்கு ரசிகர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


சீனியர்களுக்கு ஓய்வு:


ஆந்திராவைச் சேர்ந்த திலக் வர்மா இதுவரை 7 டி20 போட்டிகளில் ஆடி 1 அரைசதத்துடன் 174 ரன்கள் எடுத்துள்ளார். 25 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 3 அரைசதத்துடன் 740 ரன்கள் எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் மூலம் அறிமுகமான திலக் வர்மா, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சிறப்பாக ஆடினார். அதைத்தொடர்ந்து, அயர்லாந்து தொடரிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அயர்லாந்து தொடரில் அவர் பெரியளவில் சோபிக்கவில்லை. இந்த நிலையில், ஒருநாள் போட்டியில் இன்று அவர் களமிறங்கியுள்ளார்.


திலக் வர்மா மட்டுமின்றி பிரசித் கிருஷ்ணா, அக்‌ஷர் படேல், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் களமிறங்கியுள்ளனர். ஆல்ரவுண்டரான அக்‌ஷர் படேல், அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்புகள் வழங்கப்படாத நிலையில் இன்று அவர்கள் களமிறங்கியுள்ளனர்.


வங்கதேசம் தடுமாற்றம்:


இறுதிப்போட்டிக்கு முன்பு அனுபவம் வாய்ந்த வீரர்களான விராட்கோலி, ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து ஆடி வருகிறது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத வங்கதேச அணி 28 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இன்று போட்டி நடக்கும் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில்தான் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Asia Cup IND vs BAN: டாஸ் வென்ற இந்தியா... வலுவான இலக்கை நிர்ணயிக்குமா வங்கதேசம்..?


மேலும் படிக்க: SL vs PAK: கடைசி வரை திக்.. திக்..! கடைசி பந்தில் இலங்கை திரில் வெற்றி... போராடி தோற்றது பாகிஸ்தான்..!