ஆசியக்கோப்பை தொடரில் லீக் சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


ஆசியக்கோப்பை கிரிக்கெட்:


ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள  ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த 30ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதுவரை நடந்த 2 லீக் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் வெற்றி பெற்றுள்ளன.


IND Vs Pak:


தொடரில் மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி, இலங்கையில் உள்ள கண்டி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. ஆசியாவை சேர்ந்த இரண்டு பெரிய அணிகள் மோதுவதை காணதான் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். குறிப்பாக 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, முதன்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளன. இதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


நேருக்கு நேர்:


ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 13 முறை மோதியுள்ளன. அதில் 7 முறை இந்திய அணியும், 5 முறை பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமனில் சமனில் முடிந்துள்ளது. குறிப்பாக கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் வென்று இந்தியா கோலோச்சி வருகிறது. ஆசியக்கோப்பை தொடரில் கடைசியாக இரு அணிகளும் துபாயில் மோதிய போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலி எடுத்த 183 ரன்கள் தான் இந்த தொடரில் தனிநபரால் எடுக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக தற்போது வரை திகழ்கிறது.


இந்திய அணி: 


ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்ட ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். இருப்பினும், இன்றைய போட்டியில் ராகுல் களமிறங்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, சுப்மன் கில் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளனர். பந்துவீச்சில் சிராஜ், பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் தங்களது முழு திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியால் வெற்றி பெற முடியும்.


பாகிஸ்தான் அணி:


பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்ட்ங் என அனைத்து விதங்களிலும், கடந்த சில காலங்களாகவே பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகின் நம்பர் ஒன் ஒடிஐ அணியாக உள்ள பாகிஸ்தான் அணியை , உலகின் நம்பர் ஒன் ஒடிஐ பேட்ஸ்மேன் ஆன பாபர் அசாம் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதனால் இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணி முழு திறமையையும் வெளிப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


வானிலை அறிக்கை:


இதனிடையே, இன்றைய போட்டியின் போது கனமழை பொழிய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் எச்சரித்துள்ளன. இதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகமும் உள்ளது.