ICC WC 2023 OTT:
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமுமே இந்த ஆண்டு இறுதி வரை உற்று நோக்கும் ஒரு நாடு என்றால் அது இந்தியாதான். அதற்கு காரணம், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர். இந்த தொடர் முழுக்க முழுக்க இந்தியாவில் நடப்பதால், இந்திய அணிக்கு இந்த தொடர் மூன்றாவது கோப்பையைக் கைப்பற்ற ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணி விளையாடவுள்ள ஒருநாள் தொடர் என்றால் அது வரும் 30-ஆம் தேதி துவங்கவுள்ள ஆசிய கோப்பைத் தொடர்தான்.
இந்த தொடர் இந்தியாவுக்கு வெளியில் நடைபெற்றாலும், இந்திய அணியின் ஆட்டம் எப்படி இருக்கிறது என்பதைக் காண ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கண்களில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு காத்திருக்கும். அதேபோல் இந்த தொடரை இந்திய அணி வென்று, உலகக்கோப்பைத் தொடருக்கு இந்திய அணி தயார் என்பதை பறைசாற்ற வேண்டும் என இந்திய கிரிக்கெர்ட் அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
கிரிக்கெட் உலகில் இப்படியான பரபரப்பு நிகழ்ந்து கொண்டு இருக்கும்போதே, இந்த தொடரை முழுவதுமாக இலவசமாக காணலாம் என ஓடிடியில் ஒளிபரப்பும் உரிமம் பெற்றுள்ள ஹாட்ஸ்டார் தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை 2023 ஆகஸ்ட் 30 அன்று தொடங்கவுள்ளது. மேலும் செப்டம்பர் 02, 2023 அன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. ஆசியக் கோப்பையில் 13 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு வரும் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 05-ஆம் தேதி தொடங்கும் கிரிக்கெட் போட்டி நவம்பர் 19-ஆம் தேதி முடிவடையும். இந்தப் போட்டியின்போது மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும், இம்முறை 10 நாடுகள் போட்டியில் பங்கேற்கவுள்ளது.
சமீபத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பதிவிட்டுள்ள ட்வீட்டில் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை முழுவதும் இலவசமாக மொபைலில் காணலாம் என தெரிவித்துள்ளது.
டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் இந்த பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த இலவச ஒளிபரப்பு என்பது மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்தானே தவிர, தொலைகாட்சியில் பார்ப்பவர்களுக்கு இல்லை. தொலைக்காட்சியில் பார்க்க விரும்புபவர்கள் கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.