இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கு இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளும் தயாராகிக் கொண்டு உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஆசிய கோப்பைத் தொடரில் விளையாடி வருவதால் இதனை பலரும் உலகக்கோப்பைத் தொடருக்கான பயிற்சி என கூறிவருகின்றனர். ஒவ்வொரு நாடாக உலகக்கோப்பைத் தொடருக்கான அணியை அறிவித்து வருகின்றனர்.
இதில் இந்தியா தனது அணியினை நேற்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி அறிவித்தது. 5 பேட்ஸ்மேன்கள், 4 ஆல்ரவுண்டர்கள், 3 வேகப்பந்து வீச்சாளார்கள், இரண்டு விக்கெட் கீப்பர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் என மொத்தம் 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியினை வரும் 28ஆம் தேதி வரை ஒப்புதல் இன்றி ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமானால் செய்துகொள்ளலாம். அதேநேரத்தில் தொடர் தொடங்கப்பட்ட பின்னர் காயம் காரணமாக யாரையேனும் மாற்றவேண்டுமானால், ஐசிசி தொழில்நுட்பக் கமிட்டியின் ஒப்புதல் அவசியம்.
இந்நிலையில், இந்த ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு தமிழ்நாடு வீரர் கூட இல்லை என்ற பேச்சுகள் சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் இடம்பெற்றுவருகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இருந்து 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் வரை இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இருந்து வந்தனர். ஆனால் இம்முறை ஒருவர் கூட இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
2007 உலகக்கோப்பை - தினேஷ் கார்த்திக்
கடந்த 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணி ராகுல் டிராவிட் தலைமையில் களமிறங்கிய இந்திய அணியில் டிராவிட் , சச்சின், தோனி, கங்குலி, தினேஷ் கார்த்திக், ஷேவாக், உத்தப்பா, யுவராஜ் சிங், இர்ஃபான் பதான், அஜித் அகர்கர், ஹர்பஜன் சிங், ஜகீர் கான், முனாஃப் படேல், அனில் கும்ப்ளே மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் களமிறங்கினர். இதில் விக்கெட் கீப்பராக அணியில் இருந்த தினேஷ் கார்த்திக் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
2011 உலகக்கோப்பை - அஸ்வின்
இந்த உலகக்கோப்பையை இந்திய அணி தோனி தலைமையில் வென்றது. இந்த உலகக்கோப்பையில் தோனி, சச்சின், ஷேவாக், கம்பீர், விராட் கோலி, ரெய்னா, யுவராஜ் சிங், அஸ்வின், சாவ்லா, யுசூப் பதான், ஹர்பஜன் சிங், முனாஃப் படேல், ஜகீர் கான், ஸ்ரீசாந்த், நெஹ்ரா மற்றும் பிரவின் குமார் ஆகியோர் களமிறங்கினர். இதில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
2015 உலகக்கோப்பை - அஸ்வின்
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி தோனி தலைமையில்களமிறங்கியது. மகேந்திர சிங் தோனி (கேப்டன், கீப்பர்), விராட் கோலி (துணை கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா. இதில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை - தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி விராட் கோலி தலைமையில் களமிறங்கியது. விராட் கோலி (கேப்டன்), ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், எம்எஸ் தோனி (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் (வி.கே.), புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல், முகமது ஷமி , ரோஹித் சர்மா, குல்தீப் யாதவ். இந்த அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள். இந்த தொடருன் இடையில் காயம் காரணமாக விஜய் சங்கருக்கு பதில் அகர்வாலும் ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பண்டும் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்த அணி அறிவிக்கப்பட்டபோது, அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக அம்பத்தி ராயுடுவை அணியில் சேர்த்திருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்தனர். அதற்கு தேர்வுக்குழு தரப்பில் விஜய் சங்கர் 3டி ப்ளேயர் என்ற விளக்கம் கொடுக்கப்பட்டது. அதாவது, பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்று வடிவங்களிலும் சிறப்பாக செயல்படுவார் என்றும் ராயுடு பந்து வீசமாட்டார் என குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் யாரும் இல்லை என்ற பேச்சு அதிகமாகிக்கொண்டு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பைத் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்து வருகின்றனர்.
2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்று முகமது ஷமி சிராஜ்.