ஆசியக்கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை என இரண்டையும் நாங்கள் வெல்வோம். எங்கள் பாகிஸ்தான் வீரர்கள் கடந்த சில மாதங்களாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வந்தனர். இதனால் நிச்சயம் நாங்கள் கோப்பையை வெல்வோம் என தெரிவித்திருந்தார்.
ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறியதில் இருந்து பாகிஸ்தான் அணியின் டிரஸ்ஸிங் ரூமில் பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது காயம் காரணமாக பாகிஸ்தானின் பந்துவீச்சாளர்களான நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ரவூப் விளையாடவில்லை. இதனால் கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியில் இலங்கையிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
இலங்கைக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி தோல்விடைந்தது. பீல்டிங்கில் ஷதாப் கான், ஃபகார் ஜமான் போன்ற சீனியர் வீரர்கள் சொதப்பினர்.
இந்த போட்டிக்கு பிறகு கோவமடைந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டிரஸ்ஸிங் ரூமில் கடுமையாக பேசினார். அப்போது அவர், “ இப்படியே தொடர்ந்து விளையாடினால் சீக்கிரமே உலகக் கோப்பையை மறந்துவிடுங்கள். உங்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு” என்று பாபர் அசாம் கூறியதாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென ஷாஹீன் அப்ரிடி கேப்டன் பாபர் அசாமிடம், “ நடந்ததை விட்டுவிடுங்கள், குறைந்த பட்சம் நன்றாக பந்துவீசி, பேட்டிங் செய்தவர்களையாவது பாராட்டுங்கள்” என்று தெரிவித்தார்.
தான் பேசிகொண்டிருக்கும்போது ஷாஹீன் அப்ரிடி குறுக்கே பேசியதால் பாபர், “ யார் சிறப்பாக செயல்படுகிறார்கள், யார் இல்லை என்று எனக்கு தெரியும்” என்று கூறினார்.
அடுத்த கட்டமாக வாக்குவாதம் அதிகரிக்க இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துணை ஊழியர்களும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும் உள்ளே வந்து வாக்குவாதத்தை நிறுத்தினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் ஹோட்டலுக்கு திரும்பியபோது மற்ற வீரர்கள், சிரித்த முகமாய் இருந்தாலும் பாபர் அசாம் கவலையுடன் இருந்தது வீடியோ ஒன்றில் தெளிவாக தெரிந்தது.
அழுத்ததில் பாபர் அசாம்:
கடந்த இரண்டு டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு சென்றபோதும், தோல்வியை சந்தித்து வெளியேறியது. தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றவில்லை. இதனால் இவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை. கடந்த ஆசியக் கோப்பை 2022 இறுதிப் போட்டியிலும் இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
பாபர் அசாம் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்தாலும், அவரது கேப்டன்சி அடிக்கடி விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் இவரது கேப்டன்சி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் இந்தியா வருகிறது. கேப்டனாக பாபர் அசாமுக்கு இது கடைசி வாய்ப்பாக இருக்கலாம். ஷாஹீன் அப்ரிடி தற்போது பெரிய நட்சத்திரமாக உருவாகி வருவதால் அவருக்கு கேப்டன் பதவி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.