இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி துவம்சம் செய்யாத அணிகளே இல்லை என்ற அளவிற்கு அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் முத்திரை பதித்துள்ளார்.


கடந்த 2012ம் ஆண்டு ஆசிய கோப்பையில் பிரம்மாண்ட இலக்கை குவித்து வெற்றி பெற்று விடும் என்ற எண்ணத்தில் இருந்த பாகிஸ்தான் அணிக்கு 3 மணி நேரத்தில் அதிர்ச்சியளித்தார் விராட்கோலி. கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 18-ந் தேதி மிர்பூரில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.




இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் மற்றும் நசீர் ஜாம்ஷெட் அபாரமாக  ஆடி சதமடித்தனர். கடைசி கட்டத்தில் யூனிஸ்கான் அதிரடி அரைசதம் விளாச பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை குவித்தது. இதையடுத்து, 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.


இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது, கவுதம் கம்பீர் டக் அவுட்டாகி முதல் ஓவரிலே வெளியேற தனது ஆஸ்தான இடமான ஒன் டவுனில் விராட்கோலி களமிறங்கினார். சச்சின் டெண்டுல்கர் நிதானமாக ஆட இளவயது விராட்கோலி விரட்டலான ஆட்டத்தை கையில் எடுத்தார். இருவரும் சிறப்பாக ஆடியபோது சச்சின் டெண்டுல்கர் அரைசதம் அடித்த நிலையில் சயீத் அஜ்மல் பந்தில் அவுட்டானர். சச்சின் 52 ரன்களில் அவுட்டாகியபோது பாகிஸ்தான் வீரர்கள் ஆரவாரம் செய்தனர்.


ஆனால், அவர்களது ஆரவாரத்திற்கு அச்சுறுத்தலாக விராட்கோலி மாறினார். விராட்கோலியுடன் ஆட்டத்திற்கு இன்றைய கேப்டன் ரோகித் சர்மா மறுமுனையில் ஒத்துழைப்பு அளித்துக்கொண்டிருந்தார். ரோகித் சர்மா நிதானமாக ஆட விராட்கோலி சரவெடியாக வெடித்தார். முகமது ஹபீஸ், உமர்குல், அய்சாஸ் சீமா, சயீத் அஜ்மல், வகாப் ரியாஸ் என யார் வீசினாலும் விராட்கோலி வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.




விராட்கோலியின் அற்புதமான கவர்டிரைவால் பவுண்டரிகள் மைதானம் முழுவதும் சென்று கொண்டே இருந்தது. அபாரமாக ஆடிய விராட்கோலி சதத்தை கடந்தும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இந்திய அணி வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தபோது ரோகித் சர்மா 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 68 ரன்கள் விளாசிய நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் சரவெடியாக வெடித்த விராட்கோலியும் இந்திய அணி 305 ரன்களை எட்டியபோது ஆட்டமிழந்தார்.


148 பந்துகளில் 22 பவுண்டரி 1 சிக்ஸருடன் 183 ரன்கள் விளாசிய நிலையில் விராட்கோலி வெளியேறினார். விராட்கோலியும், ரோகித்சர்மாவும் ஆட்டமிழந்தாலும், தோனி – ரெய்னா ஜோடி 13 பந்துகள் மீதம் வைத்து  இந்தியாவை வெற்றி பெற வைத்து பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுத்தனர். கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக வலம் வரும் விராட்கோலியின் சதங்களிலே பாகிஸ்தானுக்கு எதிரான இந்த சதம் எப்போதும் கோலி ரசிகர்களுக்கு மணிமகுடமாகவே திகழ்கிறது.