ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று துபாயில் தொடங்கியது. இலங்கையும், ஆப்கானிஸ்தான் அணிகளும் மோதிய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.


இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் பரூக்கி மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவரது பந்துவீச்சில் குசல் மென்டிஸ் முதல் விக்கெட்டாக வெளியேறினார். அதே ஓவரில் சரித் அசலங்கா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். நவீன் உல் ஹக் வீசிய அடுத்த ஓவரிலே பதும் நிசங்கா 3 ரன்களில் ஆட்டமிழக்க 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.




இதையடுத்து, ஜோடி சேர்ந்த தனுஷ்கா குணதிலகா மற்றும் பனுகா ராஜபக்சே இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். அணியின் ஸ்கோர் 49 ரன்களை எடுத்தபோது தனுஷ்கா 17 ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஹசரங்கா 2 ரன்னிலும், கேப்டன் தசுன் சனகா டக் அவுட்டாகி வெளியேறினார். ஆப்கானிஸ்தானின் பரூக்கிக்கு முஜீப் உர் ரஹ்மான், கேப்டன் முகமது நபி பந்துவீச்சில் ஒத்துழைப்பு அளித்ததால் இலங்கை அணியினர் ரன் எடுக்கத் தடுமாறினர்.






இலங்கை அணிக்காக சிறப்பாக ஆடிய பனுகா ராஜபக்சே 29 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.  தீக்‌ஷனா டக் அவுட்டாக, பதிரான 5 ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 79 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், அந்த அணி 100 ரன்களை எட்டுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், சமீகா கருணரத்னே கடைசி கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தால் இலங்கை அணி 100 ரன்களை கடந்தது. 19.4 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய சமீகா 38 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 31 ரன்கள் விளாசினார்.








ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பரூக்கி 3.4 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முஜிப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், முகமது நபி 2 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். ஆப்கானிஸ்தான் அணி வலுவான பேட்டிங்கை கொண்டுள்ளதால் அந்த அணியின் பேட்டிங் வரிசையை இலங்கை அணியின் பந்துவீச்சு சிதைக்குமா..? என்று இலங்கை ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.