துபாய் சர்வதேச மைதானத்தில் ஹாங்காங் அணிக்கு எதிரான இரண்டாவது குரூப் ஏ ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 


ஆசிய கோப்பை தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றதில் ஹர்திக் பாண்டியாவின் பங்கு அபரிவிதமானது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி 3 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், எந்தவொரு பதட்டமும் இல்லாமல் பாண்டியா அசல்ட்டாக சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 






இந்த நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக, இந்தியாவின் லெவன் அணியில் ரிஷப் பண்ட் களமிறங்கியுள்ளார். அதேபோல், மற்றொரு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார். இருப்பினும் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியா vs ஹாங்காங் : 


ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கும் முடிவு குறித்து ரோகித் சர்மா பேசுகையில், “ வரும் போட்டிகளில் இந்திய அணிக்கு ஆல்ரவுண்டரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஹர்திக் சிறந்த ஃபார்மில் இருந்ததால் சில முக்கியமான போட்டிகளுக்கு மிகவும் தேவை. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் உள்ளார் “ என்று தெரிவித்தார். 


குறிப்பிடத்தக்க வகையில், துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் ஹாங்காங் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் ஃபார்முக்கு வர நல்ல வாய்ப்பாக அமையும்.