ஆசிய கோப்பை போட்டித் தொடர் நேற்று துபாயில் தொடங்கியது. இந்த போட்டியில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இதன்படி, பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத்  தொடங்க உள்ளது.


இரு நாட்டு வீரர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக மைதானம் முழுவதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் இரு நாட்டு தேசிய கொடியுடன் குவிந்துள்ளனர். பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா என்ற வீரர் இந்த போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.  


இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப்பண்ட் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக பினிஷிங் ஸ்டார் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.





இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவுடன், துணை கேப்டன் கே.எல்.ராகுல். விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்குமார், ஆவேஷ்கான், அர்ஷ்தீப்சிங் மற்றும் சாஹல் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.






பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான், பக்கர் ஜமான், இப்த்கார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, துணை கேப்டன் சதாப்கான், முகமது நவாஸ், நசீம் ஷா, ஹரீஷ் ரவுப், ஷாநாவாஸ் தஹானி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.


இன்று 100வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கும் விராட்கோலியை உற்சாகப்படுத்தும் விதமாக இந்திய ரசிகர்கள் துபாய் மைதானத்தில் குவிந்துள்ளனர்.





துபாய் மைதானத்தில் சேசிங் செய்யும் அணிகளுக்கான வெற்றி வாய்ப்பு அதிகளவில் இருக்கும் என்பதால் இந்தியா டாஸ் வென்றது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்த ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தான் அணியின் அபாயகரமான பந்துவீச்சாளர் என வர்ணிக்கப்படும் ஷாகின் அப்ரிடி இல்லாததும் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.