ஆசிய கோப்பைத் தொடரில் குரூப் ஏ பிரிவில் இன்று நடைபெற்று வரும் நான்காவது போட்டியில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றது. துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
கடந்த போட்டியின் சூப்பர் ஸ்டார் ஹர்திக் பாண்டியாக்கு பதிலாக, இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்கினார். டாஸ் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே கேஎல் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, வழக்கம்போல் ரோகித் புயல் வேகமெடுக்க தொடங்கியது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, ஹாங்காங் அணிக்கு எதிராக ஒரு ரன் எடுத்ததன் மூலம் சர்வதேச டி 20 வடிவத்தில் 3500 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்கள் அடித்து ஆயுஷ் சுக்லா பந்தில் அயாஸ் கானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன் பிறகு களமிறங்கிய கோலி, தனது திறமையை வெளிகொண்டு வரும் முயற்சியில் கேஎல் ராகுலுடன் கைகோர்த்து, அவ்வபோது மட்டும் பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டினார். இதன் மூலம் இந்திய அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் அடித்தது.
தொடர்ந்து 39 பந்துகளில் 36 ரன்கள் அடித்து நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய கேஎல் ராகுல் முகமது கசன்பர் பந்தில் விக்கெட் கீப்பர் ஸ்காட் மெக்கெக்னியிடம் கேட்சானார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், இறங்கியதும் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகளை அடித்து சிறப்பான தொடக்கம் தந்தார்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி 40 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். டி 20 வடிவத்தில் இது இவருக்கு 31 அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி ஓவரில் தன் பங்கிற்கு சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டு 22 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ச்சியாக அதே ஓவரில் மீதமுள்ள 4 பந்துகளில் 2 சிக்ஸர்களை தெறிக்கவிட்டார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும், விராட் கோலி 59 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.