ஜிம்பாப்வேயில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடருக்கு ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த மாதம் இறுதியில் நடைபெறும் ஆசிய கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மீண்டும் அணியில் களமிறங்க உள்ளனர். இந்தத் தொடரில் விராட் கோலி மீண்டும் ஃபார்மிற்கு திரும்புவாரா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர். 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி துபாயில் நேற்று தன்னுடைய பயிற்சியை தொடங்கியது. அதில் விராட் கோலி களமிறங்கி அனைத்து பந்துவீச்சாளர்களையும் அசத்தலாக எதிர்கொண்டார். குறிப்பாக அவர் சுழற்பந்து வீச்சாளர்களை அடித்து விளையாடினார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பயிற்சி செய்யும் வீடியோ இடம்பெற்றுள்ளது.  

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

கங்குலியின் கருத்து:

விராட் கோலியின் ஃபார்ம் தொடர்பாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஒரு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, “விராட் கோலி ஒரு சிறப்பான வீரர். அவருக்கு தற்போது தேவை அதிகமான போட்டிகளில் விளையாடுவது தான். அவர் நல்ல பயிற்சி செய்தால் மீண்டும் சதம் அடிப்பார். அவர் வரும் ஆசிய கோப்பை தொடரில் நிச்சயம் சதம் அடிப்பார்” எனத் தெரிவித்துள்ளார். 

ஜெய்வர்தனேவின் ஆதரவு:

முன்னதாகஇந்தியாவின் ஆசிய கோப்பை தொடருக்கான அணி தொடர்பாக முன்னாள் இலங்கை கேப்டன் மகேலா ஜெயவர்தனே கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐசிசியின் ரிவ்யூ நிகழ்ச்சியில் அவர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, “விராட் கோலி தற்போது ஒரு மோசமான ஃபார்மை சந்தித்து வருகிறார். அவர் ஒரு சிறப்பான வீரர். இதுபோன்ற இகட்டான தருணங்களில் எப்படி மீண்டு வர வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவர் இதுபோன்று ஏற்கெனவே செய்துள்ளார். ஆகவே அதேபோன்று மீண்டும் வருவார். ஒரு வீரரின் ஃபார்ம் நிரந்தரமானதில்லை. ஆனால் அவருடைய கிளாஸ் எப்போதும் நிரந்திரமான ஒன்று. எனவே நிச்சயம் மீண்டு வருவார்.

விராட் கோலியின் மோசமான ஃபார்ம்:

விராட் கோலியின் இந்த பின்னடைவிற்கு முக்கிய காரணம் அவருடைய பேட்டிங் ஃபார்ம் தான். விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து 997 நாட்களாகியுள்ளது. கடைசியாக இவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார்.  அதன்பின்னர் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் கூட சதம் அடிக்கவில்லை.

கடைசி சர்வதேச சதத்திற்கு பின்பு கோலியின் செயல்பாடு:

போட்டிகள் இன்னிங்ஸ்   ரன்கள் சராசரி  அரைசதம் டக் அவுட் சதம்
66 75 2509 36.89  24  8 0

அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை அதிலும் விராட் கோலி சமீபத்தில் சதம் அடிக்கவில்லை. கடைசியாக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். அந்தப் போட்டியில் விராட் கோலி 114* ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடிக்கவில்லை. ஐபிஎல் 2022 போட்டிகள் இவர் 347 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற டி20 மற்றும் ஒருநநள் தொடர்களில் 1,11,16 மற்றும் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த மோசமான ஃபார்மிலிருந்து மீண்டு வந்து இவர் ஆசிய கோப்பையில் மீண்டும் அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.