ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ்-ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 100வது சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கினார். இதனால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. 


 


ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பங்களாதேஷ் அணியின் வீரர்கள் தடுமாறினர். குறிப்பாக முஜிபூர் ரஹ்மான் மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரும் சிறப்பாக பந்துவீசினர். அவர்களின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பங்களாதேஷ் அணியின் வீரர்கள் திணறினர். 20 ஓவர்களின் முடிவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மொசாதக் ஹூசைன் 48 ரன்கள் எடுத்தார். ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஷீத் கான் மற்றும் முஜிபூர் ரஹ்மான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 


 






128 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரமனுல்லா குர்பாஸ்  15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இப்ராஹிம் ஸத்ரான் ஹசரதுல்லாவுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணி 9 ஓவர்களின் முடிவில் 45 ரன்கள் எடுத்திருந்தது. 


 


ஹசரதுல்லா 23 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் முகமது நபி வெறும் 8 ரன்களில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் இடையே எழுந்தது. அப்போது களமிறங்கிய நஜிபுல்லா ஸர்தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17 பந்துகளில் 6 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி 43* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆஃப்கானிஸ்தான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. அத்துடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. 


ஏற்கெனவே ஆஃப்கானிஸ்தான் அணி தன்னுடைய முதல் போட்டியில் இலங்கை அணியை அசத்தலாக வீழ்த்தியிருந்தது. இந்தச் சூழலில் தற்போது இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியையும் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நடப்பு ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குரூப் ஏ பிரிவில் இலங்கை அல்லது பங்களாதேஷ் அணிகளில் இருந்து ஒரு அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிப் பெறும் என்பதால் அந்தப் போட்டி பெறும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.




மேலும் படிக்க: ஆசிய கோப்பை: எதற்காக நான் முன்னதாகவே களமிறங்கினேன்... காரணத்தை உடைத்த ரவீந்திர ஜடேஜா..!