ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது யுஏஇயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.இந்திய அணி அடுத்து நாளை நடைபெறும் போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்தப் போட்டி தொடர்பாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நாளைய போட்டியில் நாங்கள் ஹாங்காங் அணியை எதிர்த்து விளையாட உள்ளோம். அந்தப் போட்டியை எளிதாக எடுத்து கொள்ள போவதில்லை. ஏனென்றால் டி20 போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக தான் பந்துவீசினர்.
டி20 போட்டிகளில் சில சமயம் வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக பந்துவீசவில்லை என்றாலும் விக்கெட்களை எடுப்பார்கள். அதேபோல் சுழற்பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசியிருந்தாலும் விக்கெட் கிடைக்காமல் இருக்கும். இடது கை பந்துவீச்சாளர்கள் மற்றும் லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்களை இடது கை ஆட்டக்காரர்கள் எளிதாக சமாளிக்க முடியும். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை பார்த்தவுடன் எனக்கு இந்த எண்ணம் தோன்றியது.
அதன்படியே என்னை விரைவாக களமிறக்கினர். அப்போது என்னுடைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. எந்த சூழலுக்கு நான் தயாராக இருந்தேன். அதனால் அது எனக்கு எளிதாக அமைந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்பாக ரிஷப் பண்ட் அணியில் இடம்பெறாதது தொடர்பாக முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில விளையாட்டு தளத்தின் நிகழ்ச்சியில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “ரிஷப் பண்ட் இல்லாமல் ஆடுவது மிகவும் கடினமான ஒரு முடிவாக இருந்திருக்கும். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பண்ட் சமீபத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் டி20 போட்டிகளில் அவர் சமீபத்தில் சிறப்பாக செயல்படவில்லை. குறிப்பாக ஐபிஎல் தொடரிலும் அவர் நன்றாக விளையாடவில்லை. ஆனால் ஐபிஎல் தொடர் முதல் தினேஷ் கார்த்திக் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு அணியில் என்ன செய்ய வேண்டும் என்று சரியாக தெரிந்துள்ளது. இருப்பினும் பண்ட் இல்லாததால் எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான். அணியில் ஜடேஜா தவிர வேறு இடது கை ஆட்டக்காரர்கள் இல்லை என்பது தான் அது” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க:ரிஷப் பண்ட் அணியில் இல்லாதது வருத்தம்... ஆனால் கார்த்திக்...-கருத்து கூறிய முன்னாள் இந்திய வீரர்