ஆசிய கோப்பையின் முதல் டி20 போட்டியில் இலங்கையும், ஆப்கானிஸ்தான் அணியும் இன்று துபாயில் உள்ள துபாய் சர்வசேத மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அவரது கணிப்பு மிகச்சரி என்பது போல இலங்கை வீர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து, ஆப்கானிஸ்தானுக்கு 106 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.


106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் குர்பாஸ் மிரட்டலான தொடக்கத்தை அளித்தார். தீக்‌ஷனால பதிரனா என யார் வீசினாலும் குர்பாஸ் வெளுத்து வாங்கினார். அவருக்கு ஹசரதுல்லா ஷசாய் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். ஷசாய் பவுண்டரிகளாகவும், குர்பாஸ் சிக்ஸராகவும் விளாச ஆப்கானிஸ்தான் அணி பவர்பிளேவிலே  83 ரன்களை எட்டியது.




இதையடுத்து, அதிரடி காட்டி வந்த குர்பாஸ் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ஹசரங்கா பந்தில் இறங்கி வந்தபோது போல்டாகி ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தானின் வெற்றியை உறுதி செய்துவிட்டே வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த போது ஆப்கானிஸ்தான் 83 ரன்களை எடுத்திருந்தது.  குர்பாஸ் ஆட்டமிழந்தாலும் ஷசாய் ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடி இல்லாமல் பார்த்துக்கொண்டார்.


ஆப்கானிஸ்தான் அணி வெற்றிக்கு 3 ரன்களே தேவைப்பட்ட போது இப்ராகிம் ஜட்ரான் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தன்னுடைய 100வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமைையும் பெற்றது. 





முன்னதாக, இலங்கை அணியின் விக்கெட்டுகளை ஆப்கானிஸ்தானின் பரூக்கி காலி செய்தார். அவரது மிரட்டலான பந்துவீச்சில் இலங்கை அணி தடுமாறியது. பனுகா ராஜபக்சே மற்றும் சமீகா  ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 100 ரன்களை கடந்தது. ஆனாலும், 105 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆப்கானிஸ்தான் அணி எளிதாக எட்டியது. 


இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசம் மூலமாக வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தானின் ரன்ரேட் இந்த வெற்றி மூலம் இந்த தொடரில் நல்ல நிலையை எட்டியுள்ளது. ஆப்கானிஸ்தான் 10.1 ஓவர்களிலே வெற்றி பெற உறுதுணையாக இருந்த ஷசாய் 28 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 37 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஜாட்ரான்2 ரன்னுடன் களத்தில் இருந்தார். ஹசரங்கா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.