பிரிஸ்பேன் கபா மைதானத்தில் தொடங்கிய ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்து, அடிலைட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டவாது போட்டியையும் வென்று அசத்தியது.
டிசம்பர் 26-ம் தேதி மெல்போர்னில் தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் நாள் போட்டி முடியும் முன்பே இங்கிலாந்து ஆஸ்திரேலியாவிடம் சுருண்டது. இதனால், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 61 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், இங்கிலாந்து அணி உதவியாளர்கள் இரண்டு பேருக்கும், வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், இங்கிலாந்து அணி ஸ்குவாட் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியானதால், போட்டி தொடங்கப்பட்டது. எனினும், போட்டி நடைபெறும் போது கண்டிப்பான முறைடில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்க உள்ளோம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டி, இரண்டாம் நாள் ஆட்டம் விவரம்:
வழக்கமான நேரத்தில் இருந்து ஒவ்வொரு செஷனும் 30 நிமிடங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கி இருக்கும் ஆஸ்திரேலிய அணி, உணவு இடைவெளிக்கு முந்தைய செஷன் வரை 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஹாரீஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்