Ashes Series 2023: ஆஸஷ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்த போட்டி இங்கிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாக மாறியது. அதற்கு, மிகவும் முக்கிய காரணம், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதுதான். 


இந்நிலையில் மூன்றாவது போட்டி மிகவும் சுவாரஸ்யமாக சென்றது. குறிப்பாக ஒரு இன்னிங்ஸ் ஒரு நாளுக்கு மேல் செல்லவே இல்லை. பேட்டிங்கிற்கு சவாலான ஆடுகளத்தில்  இரு அணிகளும் சிறப்பாகவே செயல்பட்டன. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் மிட்ஷெல் மார்ஷ் அதிரடியாக சதம் விளாசியதால்தான் ஆஸ்திரேலிய அணியால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை வகிக்க முடிந்தது. 


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளை வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 


இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி தொடங்கிய மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 237 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 224 ரன்னில் ஆட்டமிழக்க, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது.


பேட்டிங்கிற்கு மிகவும் சவாலான இந்த ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி 4வது நாளிலேயே முடிவை எட்டும் என அனைவரும் எதிர்பார்த்தைப் போலவே, போட்டி 4வது நாளில் முடிவினை எட்டியது.






இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் ஹாட்ரிக் வெற்றியை தடை செய்ததுடன், இந்த தொடரில் இன்னும் தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்த வெற்றி மூலம், 1 - 2 என தனது கணக்கை துவங்கியுள்ளது. 


இந்த போட்டியைக் காணவந்த இங்கிலாந்து அணி ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணி வீரர்களை மனதளவில் தாக்கும் விதமாக பேட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அழுததை முகமூடியாக தயார் செய்து அணிந்து வந்து, இங்கிலாந்து அணியின் வெற்றியைக் கொண்டாடினார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த போது, பந்தை திட்டமிட்டு சேதப்படுத்திய குற்றத்திற்காக முழுப்பொறுப்பை ஏற்பதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆனால் அதன் பின்னர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்மித் களமிறங்கும் போது இந்திய அணி ரசிகர்கள் ஸ்மித்தை கோஷங்களால் சீண்ட, அதனை விராட் கோலி கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.