இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் 2023 தொடரின் முதல் போட்டியே ரசிகர்களுக்கு விருந்தளித்தது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.
முன்னதாக, பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு 281 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 227 ரன்களுக்குள் 8 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், நாதன் லயன் இணைந்து அணிக்கு த்ரில் வெற்றியை பெற்று தந்தனர். இருவரும் 9வது விக்கெட்க்கு 55 ரன்கள் சேர்த்து வெற்றியை தேடி தந்தனர்.
பாட் கம்மின்ஸ் 44 ரன்களும், நாதன் லயன் 16 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த போட்டியில் பல பெரிய சாதனைகள் முறியடிக்கப்பட்டது. அவை என்ன என்பதை கீழே காணலாம்.
5வது அதிகபட்ச சேஸ்:
ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் வடிவத்தில் 5வது அதிகபட்ச சேஸை செய்துள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. கடந்த 1984ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி ஹெடிங்லி டெஸ்டில் 404 ரன்களை சேஸ் செய்ததே இன்னும் சாதனையாக உள்ளது. அதேபோல், கடந்த 2008ம் ஆண்டு எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிரான 281 ரன்கள் இலக்கை தென்னாப்பிரிக்க அணி வெற்றிகரமாக சேஸ் செய்தது. 1901-02-ம் ஆண்டு அடிலெய்டு டெஸ்டில் 315 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, 1928-29-ம் ஆண்டு மெல்போர்ன் டெஸ்டில் 286 ரன்கள் என்ற இலக்கை துரத்தியது.
கலக்கிய பாட் கம்மின்ஸ்:
ஆஸ்திரேலிய கேப்டன் பார் கம்மின்ஸ் இந்த டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸ் இரண்டு இன்னிங்ஸ் சேர்த்து 80 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி மொத்தம் 4 விக்கெட்களையும் வீழ்த்தினார். இதன் மூலம், இந்த பெருமையை படைத்த ஆஸ்திரேலியாவின் 6வது கேப்டன் என்ற பெருமையை கம்மின் பெற்றுள்ளார்.
இதற்கு முன், பாப் சிம்ப்சன் 4 முறையும், ஜார்ஜ் கிஃபென் 2 முறையும், வார்விக் ஆம்ஸ்ட்ராங், ரிச்சி பெனாட் மற்றும் ஆலன் பார்டர் ஆகியோரும் சாதனை படைத்துள்ளனர்.
9வது விக்கெட்டுக்கு நான்காவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்:
பாட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் இந்த டெஸ்ட் போட்டியில் 9வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான சாதனையின் இடம் பிடித்துள்ளனர். கம்மின்ஸ் மற்றும் நாதன் லயனின் இந்த பார்ட்னர்ஷிப், டெஸ்ட் கிரிக்கெட்டில் 9வது விக்கெட்க்கு வெற்றிகரமான ரன் சேஸிங்கில் நான்காவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். கடந்த 2010 ஆம் ஆண்டில் விவிஎஸ் லக்ஷ்மண் மற்றும் இஷாந்த் சர்மா இடையேயான 81 ரன்களின் பார்ட்னர்ஷிப் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொஹாலி டெஸ்ட் போட்டியில் பதிவானது.
ஆஸ்திரேலிய கேப்டனாக ஒரு டெஸ்டில் அதிக சிக்ஸர்கள்:
இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் பார் கம்மின்ஸ் மொத்தமாக 5 சிக்ஸர்கள் அடித்தார். இதன்மூலம், ஒரு டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டனாக அதிக சிக்ஸர்கள் அடித்ததில் ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்த இடத்தில் கம்மின்ஸ் உள்ளார். கடந்த 2005 ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக பாண்டிங் 6 சிக்ஸர்களை அடித்திருந்தார்.
ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி:
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஆஷஸ் தொடரில் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இரண்டாவது த்ரில் வெற்றி இதுவாகும். இதற்கு முன் 1901, 1907-08 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே சமயம் 1890-ம் ஆண்டு ஓவல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.