ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி பகலிரவு ஆட்டமாக பரபரப்பான நான்காவது நாளை எட்டியிருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த நான்காவது நாள் ஆட்டத்தில் சுவாரஸ்யமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, வேகப்பந்து வீச்சாளரான ஆலி ராபின்சன் திடீரென ஸ்பின்னராக மாறி ஆஃப் ஸ்பின்னை வீச தொடங்கிவிட்டார். இந்த நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.


இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆலி ராபின்சன் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இங்கிலாந்து அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களான ப்ராட் மற்றும் ஆண்டர்சன் முதல் போட்டியில் ஆடியிருக்கவில்லை. அவர்கள் இல்லாத குறையை போக்கும் வகையில் முதல் போட்டியில் ராபின்சன் சிறப்பாக வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இங்கிலாந்து அந்த போட்டியில் தோற்றியிருந்தாலும் ராபின்சன் கவனம் ஈர்க்கும் வகையில் பெர்ஃபார்ம் செய்திருந்தார்.


இந்நிலையில் அடிலெய்டில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நன்றாகவே பந்து வீசி வந்தார். இப்போது நடைபெற்று வரும் இந்த போட்டியில் நான்காம் நாளில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த இன்னிங்ஸிலும் முக்கிய பேட்ஸ்மேனான ஸ்மித்தின் விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளரான ராபின்சனே வீழ்த்தியிருந்தார். இப்படி நன்றாக வேகப்பந்து வீச்சை வீசிக்கொண்டிருக்கும் சமயத்திலேயே திடீரென ஸ்பின்னராக மாறி ஆஃப் ஸ்பின்னை வீச தொடங்கினார். மூன்று ஓவர்கள் முழுக்க முழுக்க ஆஃப் ஸ்பின்னராக மாறி பந்து வீசியிருந்தார். அதிரடியான வேகத்தில் ஹெல்மட்டில் வந்து மோதும் அளவுக்கு பந்தை வேகமாக வீசிக் கொண்டிருந்த ராபின்சன், திடீரென ஆரவாரமின்றி அமைதியாக ஆஃப் ஸ்பின் வீசியது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது. இணையம் முழுவதும் ராபின்சனின் ஸ்பின் பௌலிங்கே இப்போது ட்ரெண்டாகி வருகிறது.




ஒரு வேகப்பந்து வீச்சாளர் அப்படியே தலைகீழாக ஸ்பின்னராக மாறி பந்து வீசலாமா? விதிமுறைகள் அதற்கு இடம் கொடுக்கிறதா? என கேள்வி எழலாம்.


நிச்சயமாக வீசலாம். ஆனால், ஒரு பௌலர் தன்னுடைய ஸ்டைலை விட்டுவிட்டு அப்படியே தலைகீழாக வேறொரு ஸ்டைலில் வீசும்போது பந்து வீசுவதற்கு முன்பு பௌலர் தான் எந்த பாணியில் வீசப்போகிறேன் என்பதை கள நடுவரிடம் தெரியப்படுத்திவிட்டே வீச வேண்டும். ராபின்சனும் நிச்சயமாக நடுவரிடம் தெரியப்படுத்தியிருப்பார். மேலும், இது போன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டுக்கு புதிதும் அல்ல. பழம்பெரும் வீரர்களான கேரி சோபர்ஸ், கபில்தேவ் கூட இப்படி செய்திருக்கிறார்கள்.


ஆலி ராபின்சன் ஸ்பின் வீச வேண்டிய அவசியம் என்ன?



ஆலி ராபின்சன் எதற்காக அந்த சமயத்தில் ஸ்பின் பௌலிங்கை தேர்ந்தெடுத்தார் என்பதற்கான துல்லியமான காரணத்தை அவர்தான் கூற வேண்டும். ஆனால், சில விஷயங்களை வைத்து ராபின்சன் எதற்காக அப்படி வீசியிருப்பார் என்பதை நாம் யூகித்து விட முடியும்.


இந்த டெஸ்ட் போட்டியில் ஆடும் இங்கிலாந்து அணியின் ப்ளேயிங் லெவனில் பிரதானமான ஸ்பின்னர் என யாருமே கிடையாது. 5 பௌலர்களுமே வேகப்பந்து வீச்சாளர்கள்தான். பார்ட் டைமரான ஜோ ரூட் மட்டுமே ஸ்பின்னராக சில ஓவர்களை இடையிடையே வீசி வந்தார். ஆனால், இன்றைக்கு நான்காம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஜோ ரூட்டுக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது. அதனால் அவர் இன்றைய நாள் ஆட்டம் தொடங்கிய போது அவர் ஃபீல்டுக்கே வரவில்லை. இதனால் இங்கிலாந்து அணியில் ஸ்பின்னுக்கான ஆப்சனே இல்லாமல் போனது. ரூட் இடையிடையே வீச வேண்டிய அந்த சில ஓவர்களை ஸ்பின்னராக மாறி ராபின்சன் வீசியிருக்கலாம். ஏனெனில், ராபின்சன் பந்து வீசிய போது க்ரீஸில் இடது கை பேட்ஸ்மேனான ட்ராவிஸ் ஹெட்டும் லபுஷேனும் இருந்தனர். முதல் இன்னிங்ஸில் இடது கை பேட்ஸ்மேனான ஹெட்டின் விக்கெட்டை ஆஃப் ஸ்பின்னரான ரூட்டே வீழ்த்தியிருப்பார். எனவே அதே ஹெட்டுக்கு எதிராக ரூட்டை போன்றே ஆஃப் ஸ்பின் வீசி அவர் விக்கெட்டை வீழ்த்தலாம் என்கிற திட்டத்தோடு ராபின்சன் ஆஃப் ஸ்பின் வீசியிருக்கலாம்.


அப்படி இல்லையெனில், Slow over rate காரணமாக சில ஓவர்களை வேகமாக வீச வேண்டிய நிர்பந்தத்தில் ஸ்பின்னராக மாறியிருக்கலாம். அதுவும் இல்லையெனில், ஓடி ஓடி களைப்படைந்ததால் ஆசுவாசப்படுத்திக் கொள்ள சில ஓவர்களுக்கு ஸ்பின் வீசியிருக்கலாம். எது எப்படியிருந்தாலும் ஆஜானுபாகுவான ராபின்சன் ஆராவாரமின்றி அமைதியாக ஆஃப் ஸ்பின் வீசியது சுவாரஸ்யமான விஷயமாக அமைந்தது.


மேலும் படிக்க: கிரிக்கெட் வெறி.. நள்ளிரவு 1மணிக்கு கையில பேட்.. ஸ்டீவ் ஸ்மித் வீடியோவை வெளியிட்ட மனைவி!