ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடர் வரலாற்று சிறப்புமிக்கது. அந்த இரண்டு நாட்டு ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமுமே இந்த தொடருக்காக ஆவலாக காத்திருக்கும். அப்படிப்பட்ட ஆஷஸ் தொடர் இப்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டிகள் முடிந்திருக்கிறது. மூன்றிலுமே ஆஸ்திரேலியாவே வென்று இந்த ஆஷஸ் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து அணி மிக மோசமாக ஆடி தொடரை இழந்துள்ளது. குறிப்பாக, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆவதில் தனி ரெக்கார்ட் செய்து தோல்விக்கு வித்திட்டிருக்கின்றனர்.


 






இந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 54 முறை டக் அவுட் ஆகியிருக்கின்றனர். ஒரே வருடத்தில் வேறெந்த அணி வீரர்களும் இத்தனை முறை டக் அவுட் ஆனதே இல்லை. இப்படியொரு மோசமான ரெக்கார்டோடு இந்த வருடத்தை இங்கிலாந்து அணி முடித்திருக்கிறது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரைக்கும் சமீபமாக டெஸ்ட் தொடர்களில் கடுமையாக சொதப்பி வருகிறது. இலங்கைக்கு எதிரான வெற்றியுடன் இந்த ஆண்டை தொடங்கிய இங்கிலாந்து அணி அதன்பிறகு, இந்தியாவிற்கு எதிராக வெளிநாட்டு தொடரில் தோல்வியை தழுவியிருந்தது. அதன்பிறகு, உள்ளூரில் வைத்தே நியுசிலாந்திற்கு எதிரான தொடரை இழந்தது. அதன்பிறகு, இந்தியாவிற்கு எதிராக இடையில் நிறுத்தப்பட்டிருக்கும் உள்ளூர் தொடரில் தொடரை நிச்சயம் வெல்ல முடியாது எனும் சூழலில் இருக்கிறது. அதன்பிறகு, இப்போது மிகப்பெரிய கௌரவமாக கருதப்படும் ஆஷஸ் தொடரிலும் ரொம்பவே மோசமாக தோற்று தொடரை இழந்துள்ளது.


இத்தனை தோல்விகளுக்கும் இழப்புகளுக்கும் மிகமுக்கிய காரணம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் சொதப்பலே. கேப்டன் ஜோ ரூட் மட்டுமே பொறுப்பை உணர்ந்து நின்று ஆடுகிறார். அவரை தவிர மற்ற எந்த வீரர்களும் பெர்ஃபார்ம் செய்வதே இல்லை. அப்படியே பெர்ஃபார்ம் செய்தாலும் அது சீராக இருப்பதில்லை. இந்த 2021 ஆம் ஆண்டில் ஜோ ரூட் மட்டும் 1708 ரன்களை அடித்திருக்கிறார். அவருக்கு பிறகு ரோரி பர்ன்ஸ் 530 ரன்களை அடித்திருக்கிறது. இவர்களுக்கு பிறகு மூன்றாவது இடத்தை எக்ஸ்ட்ராஸ் பிடித்துள்ளது. ஆம், எதிரணி பௌலர்கள் வழங்கிய எக்ஸ்ட்ராக்கள் மூலம் இங்கிலாந்து 412 ரன்களை பெற்றிருக்கிறது. இது ரூட் மற்றும் பர்ன்ஸை தவிர இந்த ஆண்டில் மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தனிப்பட்ட முறையில் அடித்த ரன்களை விட அதிகம்.




இந்த ஆண்டில் இங்கிலாந்து அணி எடுத்திருக்கும் மொத்த ரன்களில் 26% க்கும் மேற்பட்ட ரன்களை ஜோ ரூட் மட்டுமே எடுத்திருக்கிறார். மற்ற அத்தனை பேட்ஸ்மேன்களும் சொதப்பலே. குறிப்பாக ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கும் ஹசீப் ஹமீது, ரோரி பர்ன்ஸ், சக் க்ராலி ஆகியோர் இந்த ஆஷஸில் பயங்கரமாக சொதப்பியிருக்கின்றனர். ஆஸ்திரேலிய அணியின் முதல் ஸ்பெல்லை தாண்டுவதற்குள்ளாகவே அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்கின்றனர். இந்த ஆண்டில் இங்கிலாந்தின் ஓப்பனிங் கூட்டணி சராசரியாக 22 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. சராசரியாக 60 பந்துகளுக்கு மட்டுமே களத்தில் நிற்கிறது. இதனால் நம்பர் 4 இல் இறங்கும் ஜோ ரூட் கிட்டத்தட்ட ஓப்பனர் போலவே ஆடி வருகிறார். ஜோ ரூட்டும் சொதப்பினால் இங்கிலாந்தின் கதை அவ்வளவுதான். அதைத்தான் ஆஷஸில் இன்று முடிந்திருக்கும் மூன்றாம் டெஸ்ட்டில் பார்த்தோம். இந்த டெஸ்ட்டின் இரண்டாம் இன்னிங்ஸில் ஜோ ரூட்டும் சொதப்பவே இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இன்னிங்ஸ் தோல்வியை அடைந்துள்ளது.


டெஸ்ட் போட்டிகளுக்கு பெயர் போன ஒரு அணி, கவுண்ட்டி கிரிக்கெட் என உள்ளூர் கிரிக்கெட்டில் மிகவும் வலுவாக இருக்கும் ஒரு அணி இவ்வளவு மோசமாக ஆடி தோற்பது கிரிக்கெட்டிற்கே நல்லதில்லை. இங்கிலாந்து சீக்கிரமே தங்களை மறு உருவாக்கம் செய்து கொண்டு மீண்டெழும் என நம்புவோம்.