ஏப்ரல் மாதம் முதல் தேதி உலகம் முழுவது முட்டாள்கள் தினமாக பின்பற்றப்படுகின்றது. இந்த தினத்தில் நண்பர்கள் தொடங்கி குடும்ப உறுப்பினர்கள் வரை நம்பும் வகையிலான ஒரு பொய் செய்தியைச் சொல்லி நம்பவைத்து, பின்னர் அது பொய் எனக்கூறி, நீ ஏமாந்து விட்டாய், நீ முட்டாள் என விளையாட்டாக கூறுவது உண்டு. நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால் சமூக வலைதளங்களிலும் இதுபோன்ற அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் தகவல்களைச் சொல்லிவிட்டு, கமெண்டுகளில் இது, பொய், இன்று ஏப்ரல் முதல் தேதி, முட்டாள்கள் தினம் என கூறிவருகின்றனர். அப்படி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பொய்கள் எது எது என இந்த தொகுப்பில் காணலாம்.
கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றிய பொய்:
இந்தியாவில் பல விளையாட்டுகள் விளையாடப்பட்டாலும் அதிக மக்களால் விளையாடப்படுகின்ற மற்றும் கொண்டாடப்படுகின்ற விளையாட்டு என்றால் அது கிரிக்கெட். கிரிக்கெட் ஆங்கிலேயர்களால் இந்தியாவுக்கு வந்தது என்றாலும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் இருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பல பொய் செய்திகள் இன்று அதாவது ஏப்ரல் மாதம் முதல் தேதியில் பகிரப்பட்டது. இது தொடக்கத்தில் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரே விஷயம், ஐபிஎல் மட்டும்தான். கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடர் குறித்த செய்திகளை, சமூகவலைதளங்களில் ரசிகர்கள் தெரிந்து கொள்ளும் அளவிற்கு சமூகவலைதளங்களில் செயல்படும் பல்வேறு மீம்ஸ் பக்கங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன. இந்த மீம் பக்கங்கள் மக்களுக்கு சிரிப்பூட்டும் விதமான பதிவுகள் மட்டும் இல்லாமல், சமூக அவலங்களையும் அந்த மீம் பக்கங்கள் மக்களிடத்தில் நியாயமான தார்மீக பொறுப்புணர்வுடன் கொண்டு செல்லவும் செய்கின்றன.
இப்படியான நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று, பல மீம் பக்கங்கள் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கும் வகையில் பொய் தகவல்களை பரப்பின. இது தொடக்கத்தில் பல்வேறு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது மட்டும் இல்லாமல், அதனை உடனே பலரும் தங்களது நட்பு வட்டத்திலும், குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும் பகிர்ந்தனர்.
ரசிகர்களை அதிர்ச்சியில் அழ்த்திய பொய் செய்திகள்
- இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான், ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார் என தெரிவித்துவிட்டதாக பொய் செய்தியைப் பரப்பினர்.
- மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்டியா, கேப்டன் பொறுப்பினை துறந்து விட்டதாகவும் ரோகித் சர்மாவே மீண்டும் கேப்டன் பொறுப்பினை ஏற்கவுள்ளதாகவும், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவே அணியை வழிநடத்தவுள்ளார் என்ற பொய் தகவல் வெளியானது.
- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ளார் என்ற பொய் செய்தி பரப்பட்டது.
- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ஓய்வை திரும்பப் பெறவுள்ளார், சீக்கிரமே யுவராஜ் சிங்கை நீல நிற ஜெர்சியில் பார்க்கலாம் என்ற பொய் தகவல் பகிரப்பட்டது.