இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர்.
இந்திய அணிக்காக பல போட்டிகளில் ஆடியுள்ள அனுபவமிக்க அஜித் அகர்கர் இந்திய தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்வுக்குழு தலைவர்:
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்தவர் சேத்தன்சர்மா. ஸ்டிங் ஆபரேஷனில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை தெரிவித்த காரணத்தால் அவர் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இந்திய தேர்வுக்குழுவின் தலைவர் யார்? என்று எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடித்து வந்தது. தோனி, சேவாக் என்று பலரது பெயர்களும் அடிபட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அஜித் அகர்கர்:
இந்திய தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்குழு உறுப்பினர்களாக ஷிவ்சுந்தர்தாஸ், சுப்ரோடா பானர்ஜி, சலீல் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். 45 வயதான அஜித் அகர்கர் 1977ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி பிறந்தவர். மும்பையில் பிறந்த அகர்கர் 1998ம் ஆண்டு இந்திய அணிக்காக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமானார். அதே ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
யார் இவர்?
இந்திய அணிக்காக சிறந்த பந்துவீச்சாளராக உலா வந்த அகர்கர் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 58 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதில் ஒரு முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்துவீச்சாக 160 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரே இன்னிங்சில் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
191 ஒருநாள் போட்டிகளில் ஆடி 288 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 42 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதே அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். 4 டி20 போட்டிகளில் ஆடி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதுமட்டுமின்றி 42 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 29 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஆடி லார்ட்ஸ் மைதானத்தில் அடித்த சதம் உள்பட 571 ரன்களை எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 3 அரைசதங்கள் உள்பட 1269 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் அகர்கருக்கும். புதிய உறுப்பினர்களுக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.