Ajinkya Rahane: இந்திய கிரிக்கெட் வீரர் ரஹேனா மற்றும் ராதிகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக, ரஹானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இது குறித்து தனது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள தகவலில், இன்று காலை நானும் எனது மனைவியும் அழகான ஒரு ஆண் குழந்தையினை இந்த உலகத்திற்கு வரவேற்றுள்ளோம். எனது மனைவி ராதிகாவும் எங்களது குழந்தையும் மிகவும் நலமாக உள்ளனர். உங்களின் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  தங்களுக்கு குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஹானே தெரிவித்த பிறகு, அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.  


 






இந்திய அணியின் பெருஞ்சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட்டிற்கு பிறகு, 2013ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ரஹானே அவரது இடத்தை நிரப்புவார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்தனர். ரஹானே அந்த வார்த்தைகளுக்கு பொருத்தமானவர் தான். எந்தவொரு சூழலிலும் நிதானத்தை இழக்காத ரஹானே, இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 583 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 12 சதங்களும், 23 அரை சதங்களும் அடங்கும். இந்திய அணிக்கு 5 போட்டிகளில் கேப்டனாக ஆடியுள்ள ரஹானே அதில் 4 போட்டிகளில் வெற்றியை பெற்றுத்தந்துள்ளார். ஒரு போட்டி மட்டும் டிரா ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.