ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இந்த நிலையில், இரு அணிகளும் ஆடிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி புலவாயோவி்ல நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே
இதில் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்சில் சிக்கந்தர் ராசா மற்றும் கேப்டன் கிரெக் எர்வின் அபார ஆட்டத்தால் 243 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. 86 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆப்கானிஸ்தான் அணி தொடங்கியது.
இந்த இன்னிங்சிலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல் மாலிக் 1 ரன்னிலும், ரியாஸ் ஹாசன் 11 ரன்னிலும் அவுட்டாக, முதல் டெஸ்ட்டில் இரட்டை சதம் விளாசிய கேப்டன் ஷாகிதி 13 ரன்னில் அவுட்டானார்.
தடுமாறும் ஆப்கானிஸ்தான்:
அவர் ஆட்டமிழந்த பிறகு அடுத்து வந்த ஜியா உர் ரஹ்மான் 6 ரன்னிலும், முதல் டெஸ்டில் சதம் விளாசிய ஷஷாய் அடுத்தடுத்து சொற்ப ரன்னில் அவுட்டானார்கள். தற்போது வரை முதல் டெஸ்ட்டில் இரட்டை சதம் விளாசிய ரஹ்மத் ஷா 37 ரன்னுடனும், ஷகிபுல்லா கமல் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 3வது நாளான இன்றைய ஆட்டம் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி வசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ள நிலையில் 80 ரன்களுடன் ஆடி வருகிறது. 6 ரன்கள் பின்தங்கிய நிலையில், எஞ்சிய 5 விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் அணி இமாலய இலக்கை நிர்ணயிப்பது அசாத்தியமானது.
ஆட்டம் முடிய இன்னும் 2 நாட்கள் உள்ளதால் ஆப்கானிஸ்தானின் எஞ்சிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற ஜிம்பாப்வே அணி துடிக்கும். ஜிம்பாப்வே அணியின் ங்கரவா, முசரபனி, நியாம்குரி, ராசா சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் அணியும் முடிந்த வரை நல்ல இலக்கை நிர்ணயித்துவிட்டு ஜிம்பாப்வேயின் விக்கெட்டுகளை வீழ்த்தத் துடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நகர்ந்துள்ளதால் இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் இந்த போட்டியைப் பார்த்து வருகின்றனர்.