MS Dhoni: தோனி கோபப்பட்டு ஒருபோதும் பார்த்ததில்லை என, சென்னை அணியின் பிசியோதெரபிஸ்ட் தெரிவித்துள்ளார்.
கேப்டன் கூல் தோனி:
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் ஆகச்சிறந்த கேப்டனாக எம்.எஸ். தோனி திகழ்கிறார். எந்தவொரு சூழலிலும் அமைதியை இழக்காமல், சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுத்து பல வெற்றிகளை குவித்தவர். இதனால் அவர் கேப்டப்ன் கூல் என வர்ணிக்கப்படுகிரார். இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரின்போது தோனி கடுமையாக கோபப்பட்டதாக, சென்னை அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது கருத்தை சென்னை அணியின் பிசியோதெரபிஸ்ட் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தோனி டிவியை உடைத்தாரா?
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றை அடைய கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில், பெங்களூர் அணிக்கு எதிராக சென்னை அணி களமிறங்கியது. ஆனால், அந்த போட்டியில் சென்னை தோல்வியுற்ற நிலையில், போட்டிக்கு பிறகு நடந்த நிகழ்வுகள் என, அந்த போட்டியின் வர்ணனையாளராக இருந்த ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார். அதன்படி, " நாக்-அவுட் போட்டியில் கிடைத்த வெற்றியை ஆர்சிபி கொண்டாடியது, அவர்கள் வெற்றி பெற்றதால் அவர்கள் கொண்டாடத் தகுதியானவர்கள். நான் அங்கு இருந்ததால் முழு காட்சியையும் மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஆர்சிபி கொண்டாடியது. சிஎஸ்கே வீரர்கள் கைகுலுக்க வரிசையில் நின்றிருந்தனர். ஆர்சிபி வீரர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி சிஎஸ்கே வீரர்களை அடைய சிறிது தாமதமானது. டீம் ஆர்சிபி அவர்களின் கொண்டாட்டத்தை முடித்த நேரத்தில், (தோனி) உள்ளே சென்று அவர் டிரஸ்ஸிங் அறைக்கு வெளியே இருந்த ஒரு தொலைக்காட்சி திரையை குத்தினார். ஆனால் ஒவ்வொரு வீரருக்கும் அவரவர் உணர்வுகள் இருப்பது பரவாயில்லை," என்று ஹர்பஜன் தெரிவித்தார்.
திட்டவட்டமாக மறுத்த சென்னை அணி பிசியோ:
முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஒருவரே, தோனியைப் பற்றிய சொன்ன இந்த கருத்துக்கள் இணையத்தில் வைரலாகின. இப்படி ஒரு சம்பவம் உண்மையிலேயே நடந்ததா எனவும் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கினார். பல்வேறு ஊடகங்களும் இதனை செய்தியாக வெளியிட்டன. அதன்படி, பிரபல செய்தி நிறுவனம் தோனி பற்றிய ஹர்பஜனின் கருத்தை, தனது சமூக வலைதள பக்கத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தது. அதில் இருந்த ஹர்பஜனின் கருத்தை மறுத்து, சிஎஸ்கேயின் பிசியோதெரபிஸ்ட் டாமி சிம்செக் கமெண்ட் பதிவிட்டுள்ளார்.
”தோனி கோபப்பட்டார் என்பது போலி செய்தி”
அந்த கமெண்டில், “இது முழுமையான குப்பை! MSD எதையும் உடைக்கவில்லை, எந்தப் போட்டிக்குப் பிறகும் அவரை ஆக்ரோஷமாக நான் பார்த்ததில்லை. போலிச் செய்தி!" என சிம்செக் கூறினார். இதனை கண்ட தோனி ரசிகர்கள், தோனி எப்போதுமே கேப்டன் கூல் தான் என கூறி காலரை தூக்கிவிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.