நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த பல்வேறு சாதனைகளை செய்ய உள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணியை எதிர்கொண்டது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்ற்றும் 3 டி20 போட்டிகளிலும் வென்று இந்திய அணி மொத்தமாக தொடரை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
அஸ்வின் செய்யவிருக்கும் சாதனைகள்:
இந்த போட்டிகள் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உள் நாட்டில் நடைபெறும் இந்த போட்டியில் நியூசிலாந்தை எதிர் கொள்ள தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த போட்டியில் பல்வேறு சாதனைகளை செய்ய உள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் சாதனையை முறியடிக்க இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே அஸ்வினுக்கு தேவை. அவர் இந்த தொடரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் அவர் நாதன் லயனை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்பார். முன்னதாக நாதன் லயன் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 15 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றும் பட்சத்தில் முதல் வீரராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். இதுவரை இந்திய அணிக்காக 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் அஸ்வின் 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இன்னும் ஒரு முறை அவர் இந்த தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஷேன் வார்னேவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடிப்பார்.
அஸ்வின் இதுவரை 102 போட்டியில் விளையாடி 527 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இன்னும் இந்த தொடரில் அஷ்வின் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினால் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை தாண்டி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தை பிடிப்பார்.இதுவரை இந்திய மண்ணில் முன்னாள் வீரரான கும்ப்ளே 476 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இதுவே இந்திய வீரர் ஒருவர் இந்திய மண்ணில் எடுத்த அதிக டெஸ்ட் விக்கெட்டுகளாக இருக்கிறது. இந்நிலையில் இந்திய மண்ணில் இதுவரை 466 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் இன்னும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அந்த சாதனையும் அவர் முறியடிக்கும் வாய்ப்புள்ளது.