இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஏற்கனவே ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணி 2-1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. 


இந்தநிலையில், இரு அணிகளும் மோதும் 3 ஒருநாள் கொண்ட போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு கவுகாத்தியில் தொடங்குகிறது. டி20 தொடர் ஓய்வுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர். இதனால் ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு ஆடும் லெவனில் விளையாடும்  கிடைக்குமா? என்ற கேள்வி எழுக்கிறது.


போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பந்து வீசிய போது, காலில் அசவுகரியத்தை உணர்ந்ததன் காரணமாக, இலங்கை உடனான தொடரில் இருந்து பும்ரா விலகியதாக விளக்கமளித்தார். நாளைய போட்டியில் இளம் வீரர் சுப்மன் கில் தன்னுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனவும், இஷான் கிஷானுடன் விளையாட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறினார். 


இந்தநிலையில் கடந்த ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த இஷான் கிஷன், இன்றைய இலங்கை எதிரான போட்டியில் களமிறக்கப்பட மாட்டார் என தெளிவாக தெரிகிறது. சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு அடுத்த போட்டியில் இடம் பெறாத முதல் வீரர் இஷான் கிஷன் இல்லை என்றாலும், இந்த மாதிரியான சூழ்நிலைகளில் சிக்கிய சில வீரர்களின் பட்டியலை காணலாம். 


இர்பான் பதான்: 


கடந்த 2012ம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்தது. தொடரில் கடைசி போட்டியில் இர்பான் பதான் 29 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்களை அள்ளினார். இவரின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி அந்த போட்டியில் வென்றது. 


சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியும் இந்திய விளையாடிய அடுத்த போட்டியில் பதானுக்கு வாய்ப்பளிக்கவில்லை. இதுவே இர்பானின் கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது. 


சஞ்சு சாம்சன்:


இந்திய அணி கடந்த ஜீன் மாதம் அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் (9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) 77 ரன்கள் குவித்தார். இதற்கு பிறகு, இந்திய அணி இங்கிலாந்து சென்று விளையாடியபோது ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. 


புவனேஷ்வர் குமார்:


கடந்த 2018 ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றது. முதல் டெஸ்டில் பந்துவீசிய புவனேஷ்வர் குமார் முதல் 3 ஓவர்களில் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பேட்டிங்கில் 38 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்களையும் அள்ளினார். இதன் பிறகு இரண்டாவது போட்டியில் உட்கார வைக்கப்பட்ட அவர், மூன்றாவது போட்டியில் திரும்பி ஒரு மேட்ச் வின்னிங் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்ட நாயகன் விருது பெற்றார். அந்த போட்டிக்கு பிறகு இன்று வரை புவி எந்த டெஸ்டிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


குல்தீப் யாதவ்:


சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு நடந்தது சமீபத்திய வங்காளதேச டெஸ்ட் தொடர்தான். கடந்த மாதம் வங்கதேசம் சுற்றுப்பயணத்தில் குல்தீப் முதல் டெஸ்டில் பேட்டிங் மூலம் 40 ரன்கள் எடுத்தார். பின்னர் பந்துவீச்சில் 8 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். அவர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அடுத்த போட்டியில் விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.


கருண் நாயர்:


இந்தியாவுக்காக டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது பேட்ஸ்மேன் கருண் நாயர். இவரைத் தவிர வீரேந்திர சேவாக் மட்டுமே டெஸ்டில் 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்டில் நாயர் ஆட்டமிழக்காமல் 303 ரன்கள் எடுத்தார். வங்கதேசத்துக்கு எதிரான அடுத்த டெஸ்டில் இந்தியா விளையாடியது கருண் நாயர் பெஞ்சில் அமர வேண்டியதாயிற்று. அதன்பிறகு எந்த டெஸ்ட் தொடரிலும் விளையாடவில்லை. 


இந்தியா:  ரோஹித் சர்மா (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஷுப்மன் கில், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்ப), யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ். முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.


இலங்கை:  தசுன் ஷனக (கேப்டன்), நுவனிது பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ, அஷேன் பண்டார, பதும் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, சாமிக்க கருணாரத்னே, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம (விக்கெட் கீப்பர்), டில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷங்க, பிரமோத். வெல்லலகே, ஜெஃப்ரி வான்டர்சே, கசுன் ராஜித, லஹிரு குமார, மற்றும் மஹீஷ் தீக்ஷன.