டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தும் நியுசிலாந்தும் நேற்று மோதியிருந்தன. இந்த போட்டியில் நியுசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இங்கிலாந்தே கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அணி இப்போது அரையிறுதியோடு வெளியேறியிருக்கிறது. இங்கிலாந்து அணி எங்கே கோட்டை விட்டது?


இங்கிலாந்து - நியுசிலாந்து இரண்டு அணிகளின் பேட்டிங் பெர்ஃபார்மென்ஸ்களையும் ஒப்பிட்டு பார்த்தால், நேற்றைய போட்டி எந்த இடத்தில் நியுசிலாந்து பக்கமாக திரும்பியது என்பதை தெளிவாக உணர முடியும்.


முதலில் பவர்ப்ளே. இந்த முதல் 6 ஓவர்களில் இங்கிலாந்து அணி 40-1 என்ற நிலையில் இருந்தது. அதேநேரத்தில், நியுசிலாந்து அணி இந்த பவர்ப்ளேயில் 36-2 என்ற நிலையில் இருந்தது. இரண்டு அணிகளுக்கும் இடையே ரன்களில் பெரிதாக வித்தியாசம் இல்லை. ஆனால், நியுசிலாந்து அணி கூடுதலாக ஒரு விக்கெட்டை மட்டும் இழந்திருக்கிறது.



அடுத்து மிடில் ஓவர்கள். 7-15 இந்த மிடில் ஓவர்களில் இங்கிலாந்து அணி 70 ரன்களை எடுத்து 1 விக்கெட்டை மட்டுமே இழந்துள்ளது. அதேநேரத்தில், நியுசிலாந்து அணி 7-15 ஓவர்களில் 71 ரன்களை எடுத்து 1 விக்கெட்டை மட்டும் இழந்துள்ளது. இந்த மிடில் ஓவர்களில் இரண்டு அணிகளுமே ஒரே மாதிரியாகத்தான் பெர்ஃபார்ம் செய்துள்ளன.


இப்போது டெத் ஓவர்களுக்கு வருவோம். 16-20 இந்த டெத் ஓவர்களில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 56 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதேநேரத்தில், நியுசிலாந்து அணி டெத் ஓவர்களில் வெற்றிபெற தேவையான 60 ரன்களையும் நான்கே ஓவர்களில் அதாவது, 16-19 ஓவர்களிலேயே எடுத்து 20 வது ஓவரை மீதம் வைத்து போட்டியை வென்றுவிட்டது.


இப்போது இரண்டு அணிகளின் பெர்ஃபார்மென்ஸையும் ஒப்பிடுவோம். பவர்ப்ளே, மிடில் ஓவர் இரண்டிலுமே இரண்டு அணிகளின் பெர்ஃபார்மென்ஸிலும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. ஆனால், டெத் ஓவரை பாருங்கள். இங்கிலாந்து 5 ஓவர்களில் 56 ரன்களை எடுத்திருக்கிறது. நியுசிலாந்து நான்கே ஓவர்களில் 60 ரன்களை எடுத்திருக்கிறது. இங்கேதான் ஆட்டமே மாறியிருக்கிறது. பவர்ப்ளே, மிடில் ஓவர்களில் இரண்டு அணிகளும் சமநிலையில் இருந்தன. ஆனால், டெத் ஓவரில் ஆட்டம் முழுக்க முழுக்க நியுசிலாந்து பக்கமே இருந்தது. அந்த டெத் ஓவர் பெர்ஃபார்மென்ஸால் நியுசிலாந்து போட்டியையும் வென்றிருக்கிறது.



டெத் ஓவரில் குறிப்பாக 17,18, 19 இந்த மூன்று ஓவர்கள்தான் இங்கிலாந்தை தோல்வி பாதைக்கு அழைத்து சென்றது. இந்த மூன்று ஓவர்களில் மட்டும் நியுசிலாந்து அணி 57 ரன்களை எடுத்திருந்தது.


17 வது ஓவரை ஜோர்டன் வீசியிருந்தார். ஜேம்ஸ் நீஷம் ஸ்ட்ரைக்கில் இருந்தார். இவருக்கு லெக் சைடை கட்டம் கட்டி மோர்கன் ஃபீல்ட் செட்டப் செய்திருந்தார். டீப் லெக்கில் 4 ஃபீல்டர்களும் ஆஃப் சைடில் ஒரே ஒரு ஃபீல்டர் மட்டுமே இருந்தார். ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஆங்கிள் இன் டெலிவரிக்களாக வீசி நீஷமை லெக் சைடில் மட்டுமே அடிக்க வைத்து பவுண்டரி கொடுக்காமல் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது விக்கெட்டை வீழ்த்த வேண்டும். இதுதான் இங்கிலாந்தின் ப்ளான். திட்டமிட்டபடியே ஜோர்டன் அந்த ஓவரை வீசினார். ஆனால், நீஷம் இங்கிலாந்தின் ப்ளானை உடைத்தெறிந்தார். இங்கிலாந்து எதிர்பார்த்ததை போலவே லெக் சைடில்தான் அடித்தார். ஆனால், ஃபீல்டருக்கு வேலை கொடுக்காமல் பந்துகள் எல்லைக்கோட்டை தாண்டி பறந்தன. இரண்டு கேட்ச் வாய்ப்புகளும் இந்த ஓவரில் அமைந்தது. ஒரு கடினமான வாய்ப்பை பேர்ஸ்ட்டோவும் லிவிங்ஸ்டனும் இணைந்து கேட்ச் ஆக்கினர். ஆனால், பேர்ஸ்ட்டோவின் முடி எல்லைக்கோட்டை தொட்டதால் அது சிக்சர் ஆனது. இன்னொரு வாய்ப்பை பேர்ஸ்ட்டோவும் லிவிங்ஸ்டனுமே அவர் பிடிப்ப்பார் என இவரும் இவர் பிடிப்பாரென அவரும் கோட்டை விட்டனர்.


இந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் வந்தது. அடுத்த ஓவரிலும் நீஷம் ஒரு சிக்சரை பறக்கவிட்டு 11 பந்துகளில் 27 ரன்களை எடுத்து அவுட் ஆனார். 19 வது ஓவரில் டேரில் மிட்செல் 20 ரன்களை அடித்து அத்தனை நேரம் நின்றதற்கான ஞாயத்தை கற்பிக்கும் வகையில் போட்டியை வெற்றிகரமாக முடித்து வைதார். 47 பந்துகளில் 72 ரன்களை எடுத்து மிட்செல் நாட் அவுட்டாக இருந்தார்.


இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணி இந்த 3 ஓவர் சொதப்பலால் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியிருக்கிறது.