90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருப்பது 2007ஆம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வென்ற தருணம்தான். அதில், இறுதிபோட்டியில் கடைசி ஓவரை வீசி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த ஜோகிந்தர் சர்மா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை:
2004 முதல் 2007 வரை 4 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் ஜோகிந்தர் சர்மா. 77 முதல்தர ஆட்டங்களில் 5 சதங்களுடன் 2804 ரன்களும் 297 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 2007 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிச்சுற்றில் கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன.
கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் களத்தில் இருந்தார். அந்த ஓவர் யாருக்கு கொடுக்கப்படும் என்பதில் பெரும் குழப்பம் நிலவியது. ஹர்பஜன் சிங்குக்கு ஒரு ஓவர் மிச்சம் இருந்தது. ஆனால், அவர் வீசிய கடைசி ஓவரில் மிஸ்பா அதிரடியாக ஆடியிருந்தார். சிக்ஸர்கள் பறக்க விட்டிருந்தார்.
மறக்க முடியாத தருணம்:
தொடர் சஸ்பென்ஸ்-க்கு மத்தியில், ஜோகிந்தர் சர்மாவை அழைத்து பந்தை கொடுத்தார் தோனி. யாரும் எதிர்பார்க்கவில்லை. தோனியின் நம்பிக்கை பொய்யாகவில்லை. கடைசி ஓவரை வீசிய ஜோகிந்தர் சர்மா, 3-வது பந்தில் மிஸ்பாவின் விக்கெட்டை எடுத்தார். அதனால் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. எனினும் அதுவே ஜோகிந்தர் சர்மா விளையாடிய கடைசி சர்வதேச ஆட்டமாகும்.
ஐபிஎல் போட்டியில் முதல் நான்கு ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று 16 ஆட்டங்களில் விளையாடினார். 2011இல் கார் விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சில காலம் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடவில்லை.
ஓய்வு:
அதன்பிறகு 2012-13 உள்ளூர் போட்டிகளில் மீண்டும் விளையாடத் தொடங்கினார். 2022-ல் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்றார்.
இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜோகிந்தர் சர்மா அறிவித்துள்ளார். கிரிக்கெட்டில் பல்வேறு பொறுப்புகளில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஹரியானா காவல்துறையில் துணை காவல் கண்காணிப்பாளராக ஜோகிந்தர் தற்போது பணியாற்றி வருகிறார். 2007 டி20 உலக கோப்பை வென்ற அணியில், மூன்று வீரர்களை தவிர்த்து மற்ற அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டனர். ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், பியூஷ் சாவ்லா ஆகியோர் மட்டுமே தற்போது விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.