இந்தியா - இலங்கை:
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்க உள்ளது.
சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
முதலில் டி20 போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளது. அந்த வகையில் முதல் டி20 போட்டி இன்று பல்லகேலேவில் தொடங்கியது. இதில் இலங்கை அணி டாஸ் வென்றது. இதையடுத்து அவ்வணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சூர்யகுமார் அதிரடி:
இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஜெய்ஸ்வாலும் சுப்மன் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் அதிரடியை காண்பிக்க 34 ரன்கள் எடுத்திருந்தபோது சுப்மன் கில் நடையை கட்டினார். தொடர்ந்து ஜெய்ஸ்வாலும் 40 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து கைகோர்த்த சூர்யகுமார் மற்றும் பண்ட் ஜோடி சிறப்பாக ஆட்டத்தை கொண்டு சென்றனர். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததோடு 58 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களான ஹர்த்திக் பாண்ட்யா, ரியான் பராக் ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகி வெளியேறினர். இதனிடையே பண்ட் மட்டும் 49 ரன்களில் போல்ட்டாகி அவுட்டானார். அக்சர் படேல் மட்டும் 10 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது இந்திய அணி. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இலங்கை களமிறங்க உள்ளது.
இலங்கை அணி சார்பில் பதிரானா 4 விக்கெட்டுகளும், மதுசங்கா, ஹசரங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணியும் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன்படி 8 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பதும் நிஷாங்கா 37 ரன்களும் குசல் மெண்டிஸ் 39 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.