கிரிக்கெட் வரலாற்றில் சில வீரர்களின் பெயர்கள் காலத்திற்கும் எப்போதும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும். அப்படி கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத வீரர் விராட் கோலி. கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

27 ஆயிரம் ரன்கள்:


இந்த வகையில், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி புது வரலாறு படைக்கும் வாய்ப்பு மீண்டும் உருவாகியுள்ளது. கோலி டி20 போட்டிகளில் ஓய்வு பெற்ற  நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் 19ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.


இந்த டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை மீண்டும் முறியடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. சென்னையில் நடக்கும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி வெறும் 58 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் ( டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் உள்பட) 27 ஆயிரம் ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாறு:


விராட்கோலி இந்த சாதனையை படைத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களை விளாசிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்பு இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்சில் ( 226 டெஸ்ட் இன்னிங்ஸ், 396 ஒருநாள் இன்னிங்ஸ், 1 டி20 போட்டிகள்) 27 ஆயிரம் ரன்களை விளாசினார்.


விராட் கோலி வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்த சாதனையை படைத்தால் 592 இன்னிங்சில் இந்த சாதனையை படைத்தவர் என்ற வரலாறு படைப்பார். விராட் கோலி இதுவரை 591 இன்னிங்சில் 26 ஆயிரத்து 942 ரன்களை எடுத்துள்ளார். 147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் 600க்கும் குறைவான இன்னிங்சலே 27 ஆயிரம் ரன்களை எடுத்தவர் என்ற புதிய சகாப்தத்ததை படைப்பார்.


கிங் கோலி:


சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமின்றி ரிக்கி பாண்டிங், குமார சங்ககரா ஆகியோர் மட்டுமே 27 ஆயிரம் ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 35 வயதான விராட் கோலி 113 டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதங்கள், 7 இரட்டை சதங்கள் 30 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 848 ரன்களை எடுத்துள்ளார். 295 ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள், 72 அரைசதங்களுடன் 13 ஆயிரத்து 906 ரன்கள் எடுத்துள்ளார். 125 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம், 38 அரைசதங்களுடன் 4 ஆயிரத்து 188 ரன்களை எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் 252 போட்டிகளில் ஆடி 8 சதங்கள் 55 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 4 ரன்கள் எடுத்துள்ளார்.