தென்னாப்பிரிக்காவை சேர்ந்த உலகின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஏபி டிவிலியர்ஸ் மீண்டும் அணிக்கு திரும்புவாரா என்ற கேள்விக்கு - புல் ஸ்டாப் வைத்துள்ளது தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியம்.


மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படுபவர் ஏபி டிவிலியர்ஸ், உலகில் இவரின் கிரிக்கெட் ஷாட்களுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை. நன்கு விளையாடிக் கொண்டிருந்த காலத்திலேயே (மே 2018) திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் டிவிலியர்ஸ். சர்வதேச கிரிக்கெட்டில் 114 டெஸ்ட் போட்டிகள், 278 ஒருநாள் போட்டிகள், 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.


ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகள் ஆன பிறகும், இன்றும் அவர் பேட்டிலிருந்து  சிக்ஸர்கள் சர்வ சாதாரணமாக பறந்து கொண்டே இருக்கின்றன. அதற்கு சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரே சாட்சி, 6 இன்னிங்சில் விளையாடிய டிவில்லியர்ஸ் 2 அரை சதங்களுடன், 207 ரன்களை விளாசினார்.. 


இப்படியிருக்க மீண்டும் தென்னாபிரிக்க அணிக்கு ஏபி டிவில்லியர்ஸ் திரும்ப உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இது குறித்து கடந்த மாதம் ஐபிஎல் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது கருத்து தெரிவித்த ஏபி டிவில்லியர்ஸ் "நானும் தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளரான பவுச்சரும் பேசி வருகிறோம், கடந்த ஆண்டே நான் மீண்டும் அணிக்கு திரும்ப விரும்புகிறேனா என்று என்னிடம் கேட்டார்கள். நானும் நிச்சயமாக என்றேன்... இந்த ஐபிஎல் தொடர் நிறைவடைந்தவுடன் இது குறித்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம்" என தெரிவித்திருந்தார்.


மேலும் "தற்போதைய தென் ஆப்பிரிக்க அணியில் எனக்கு இடம் இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும், அனைத்தும் சரியாக இருந்தால் ஐபிஎல் முடிவில் முடிவு எடுக்கப்படும்" என்று சொல்லியிருந்தார். இதனால் இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையில் டிவில்லியர்ஸ் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருந்தது. 






ஆனால் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஏபி டிவில்லியர்ஸ் திரும்ப போவதில்லை என்பதை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் "டிவில்லியர்ஸ் ஏற்கனவே அறிவித்த ஓய்விலிருந்து சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பப் போவதில்லை" என்று தெரிவித்துள்ளது. மேலும் "தன்னுடைய ஓய்வு முடிவு இறுதியானது, இதிலிருந்து மனம் மாறப் போவதில்லை" என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளதாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது...


டிவில்லியர்ஸ் எடுத்துள்ள இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...