விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடியது. இதில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வென்றது. அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தொடங்கியது.


முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற சூழலில், இரண்டாவது போட்டி நடைபெற இருந்த கடந்த 27-ஆம் தேதி இந்திய அணியின் வீரர் க்ருணால் பாண்ட்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவருடன் நெருக்கமாக இருந்த முக்கிய வீரர்களான பிரித்விஷா, சூர்யகுமார் யாதவ், இஷான்கிஷான், யுஸ்வேந்திர சாஹல், ஹர்திக் பாண்ட்யா என 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. இதனால், இந்திய அணி இளம் வீரர்களுடன் அடுத்தடுத்து களமிறங்கிய இரண்டு டி20 போட்டியிலும் தோல்வியடைந்தது. குறிப்பாக, கடந்த போட்டியில் இந்திய அணி 81 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது.




இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட வீரர்களில் இந்திய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு வீரரான கிருஷ்ணப்ப கவுதமிற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.






இந்த தொடரில் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போட்டி தொடங்கியதில் இருந்து போட்டி முடியும் வரை, கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்திலே போட்டித்தொடர் முழுவதும் நடத்தப்பட்டது. வீரர்கள், நடுவர்கள் என போட்டியில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பு கருதி பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பயோ-பபுள் விதிகளும் அமலில் இருந்தது.




இவ்வளவு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டும், தொடரின் இறுதிகட்டத்தில் இந்திய வீரர்கள் கொரோனா பிடியில் சிக்கியது இந்திய ரசிகர்களையும், அணி நிர்வாகத்தினரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பாதிப்பு உறுதி செய்யப்பட்ட க்ருணால் பாண்ட்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சாஹல் மற்றும் கிருஷ்ணப்ப கவுதம் இருவரும் அவர்களது அறையிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  இங்கிலாந்து அணியினருடனான டெஸ்ட் போட்டியில் சீனியர் அணியினர் வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி தங்களது முதல் டெஸ்ட் போட்டியைத் தொடங்க உள்ள நிலையில், இந்திய இளம் அணியின் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது, அவர்களை மனதளவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.