காமன்வெல்த் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் இறுதி ஆட்டத்திலும், லாவ்ன் பவுல்ஸ் ஆட்டத்திலும் தங்கம் வென்று அசத்தியது. இந்த நிலையில், இந்திய அணிக்கு இன்று பதக்கங்கள் குவிவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
தடகளப் போட்டிகளில் இன்று இந்தியா சார்பில் நமது வீரர்கள் இறுதிப்போட்டியில் களமிறங்குகின்றனர். ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியின் இறுதிப் போட்டியில் தேஜஸ்வின் சங்கர் களமிறங்குகிறார். இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு நடைபெறுகிறது.
பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியின் இறுதிப்போட்டியில் மன்ப்ரீத் கவுர் களமிறங்குகிறார். இந்த போட்டி நள்ளிரவு 12.35 மணிக்கு நடைபெற உள்ளது. ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. நள்ளிரவு 1.15 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் அனீஷ், தேவேந்திர கெலாட் மற்றும் தேவேந்திர குமார் ஆகியோர் களமிறங்குகின்றனர். மேற்கண்ட போட்டிகள் மட்டுமின்றி 1500 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் இந்தியாவின் குஷக்ரா ராவத் களமிறங்குகின்றார். இந்த போட்டி நள்ளிரவு 12.42க்கு நடைபெற உள்ளது.
இன்று இரவு நடைபெறும் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் சங்கருடன், 12 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். பகாமஸ் வீரர் தாமஸ், இங்கிலாந்து வீரர் கிளார்க், நியூசிலாந்து வீரர் கெர், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் இந்திய வீரருக்கு மிகவும் நெருக்கடி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்திய வீரர் சிறப்பாக செயல்படுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துள்ளனர்.
பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் மன்ப்ரீத்கவுருடன் 11 வெளிநாட்டு வீராங்கனைகளும் மோத உள்ளனர். நியூசிலாந்து, கனடா மற்றும் ஜமைக்கா வீராங்கனைகள் மிகவும் சவாலான வீராங்கனைகளாக இன்று திகழ்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்