காமன்வெல்த் போட்டிகளில் தடகளத்தில் நேற்று இந்தியா சார்பில் உயரம் தாண்டுதலில் பங்கேற்ற தேஜஸ்வின் சங்கர் சிறப்பாக உயரம் தாண்டி அசத்தினார். அத்துடன் அவர் முதல் முறையாக காமன்வெல்த் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று அசத்தினார். காமன்வெல்த் உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் இது என்பதால் பலரும் அவரை பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஹீமா தாஸ் பங்கேற்றார். இவர் இந்தப் பிரிவில் இரண்டாவது ஹீட்ஸில் ஓடினார். அதில் அவர் பந்தய தூரத்தை 23.45 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். அத்துடன் அவர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இன்று நள்ளிரவு 12.53 மணிக்கு நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இவர் பங்கேற்க உள்ளார்.
முன்னதாக கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் மற்றும் முகமது அனீஸ் யஹியா பங்கேற்றனர். இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தனர். குறிப்பாக முரளி ஸ்ரீசங்கர் தன்னுடைய முதல் வாய்ப்பில் 8.05 மீட்டர் தூரம் குதித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். முகமது அனீஸ் யஹியா 7.68 மீட்டர் தூரம் குதித்து முதல் 12 இடங்களுக்குள் வந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். இவர்கள் இருவரும் இன்று நள்ளிரவு 12.58 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா அணி 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தமாக 18 பதக்கங்களை வென்றுள்ளது. அத்துடன் பதக்க பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்